பாமக, திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் விசிக அந்த கூட்டணியில் தொடருமா?: திருமா பதில்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை மகாபலிபுரத்திற்கு வரவழைத்து விஜய் பேசி இருப்பது, அரசியலில் புதிய அணுகுமுறை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.;
thiruma
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை மகாபலிபுரத்திற்கு வரவழைத்து விஜய் பேசி இருப்பது, அரசியலில் புதிய அணுகுமுறை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அரியலூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரான திருமாவளவன் எம்பி தலைமையில் ஆட்சியில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம் குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார். இதற்கு அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். பீகாரில் வாக்குத் திருட்டு நடந்தது போன்று, இங்கேயும் அரங்கேறி விடக்கூடாது. அதை அனைவரும் இணைந்து தடுத்தாக வேண்டும். மேலும், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்தில் நடிகர் விஜய் சந்தித்து பேசியது அவருடைய முடிவு. அது குறித்து அவருடைய கட்சியை சார்ந்த தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் கருத்து சொல்ல வேண்டிய ஒன்று. பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் இடங்களுக்கே சென்று சந்தித்து, ஆறுதல் சொல்வது தான் இவ்வளவு காலமாக அரசியல் தலைவர்கள் பின்பற்றி வரும் நடைமுறை. ஆனால் நடிகர் விஜய் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து பார்த்தது புதிய அணுகுமுறை. இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி மட்டும்தான் இப்போது, கூட்டணி என்கின்ற வடிவத்தோடு இருக்கிறது. மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி கிடக்கின்றன என்பது உண்மைதான். அந்த உண்மையை கருத்தில் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் வருகின்ற 2026 தேர்தலில் மீண்டும் திமுக தான் வெற்றி பெறும் என கருத்து சொல்லி இருக்கிறார்” என்றார். ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் விசிக அந்த கூட்டணியில் தொடருமா? என்ற கேள்விக்கு பார்க்கலாம் என பதிலளித்துச் சென்றார்.