தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?: ஆவேசமாக கேட்ட விஜய்

தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது என ஆவேசமாக விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2025-11-04 05:05 GMT

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் தங்கி ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார். கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் இரவு 11 மணி அளவில் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக போதையில் வந்த 3 பேர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து கார் ண்ணாடியை உடைத்து, அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி உள்ளனர். அவர் மயக்கமடைந்ததும், மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வன்கொடுமை செய்து விட்டுத் தப்பினர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவியின் ஆண் நண்பர் மயக்கம் தெளிந்த பிறகு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அதிகாலை நேரத்தில் காவல்துறையினர் காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியின் ஆண் நண்பர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச்சம்பவம் நடைபெற்ற பிருந்தாவன் நகர்ப் பகுதியில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்." என விஜய் வலியுறுத்தி உள்ளார்.

Similar News