கோவை சம்பவத்தில் ஒரு மாதத்திற்குள் அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர உத்தரவிட்டுள்ளேன்: மு.க.ஸ்டாலின்
கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 11 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெரிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.