ஆளுநர் திடீரென வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்!!

ஆளுநர் திடீரென வெளியேறியது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.;

Update: 2026-01-20 06:46 GMT

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது.... "ஆளுநரின் மைக் தொடர்ந்து ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன". ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு, அவர் தடையின்றி பேச அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் தயாரிக்கப்பட்ட உரையில் பல ஆதாரமற்ற மற்றும் வழிதவற வைக்கும் கூற்றுகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் பல முக்கியமான பிரச்சினைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. மாநிலம் ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறப்படுவது உண்மையிலிருந்து வெகுவாக விலகியுள்ளது. முதலீட்டாளர்களுடன் கையெழுத்திடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) ஆவணங்களாக மட்டுமே உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதியே. முதலீட்டு தரவுகள், தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்குப் போதிய ஈர்ப்பை இழந்து வருவதை காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் மாநிலங்களுக்குள் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இன்று ஆறாவது இடத்தைக் கூட தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழுக்கள் இல்லாமல் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. கோவில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. பண்டைய கோவில்களின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவுகள் ஐந்து ஆண்டுகளாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அக்கறையின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அவர்கள் தீர்க்கப்படாத நியாயமான கோரிக்கைகளால் விரக்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கைகளும் உரையில் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் அவமதிக்கப்பட்டு, அதனை மதிக்க வேண்டிய அடிப்படை அரசியலமைப்புக் கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆர்.என்.ரவி கேட்டுள்ளார். ஆனால், மரபுப்படி, தமிழ்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதால், ஆளுநர் வெளியேறியுள்ளார்.

Similar News