அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 145 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை: போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியி்ல் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 145 பேர் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.
2011-15 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 150 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 145 பேர் நேரில் ஆஜராகினர். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிட வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ள அறிவுறுத்தி, அடுத்த கட்டமாக மேலும் 150 பேர் வரும் ஜன.6,7,8 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக சம்மன் பிறப்பித்து விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.