நிர்மலா சீதாராமனின் அப்பாவை இழுத்து வம்பிழுக்கும் உதயநிதி ஸ்டாலின்...!
”அப்பன்” வீட்டு பணத்தையா கேட்கிறேன்” என்ற ஒற்றை வார்த்தையால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.
கடந்த வாரம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இடை விடாது பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மழைநீரில் தத்தளித்தது. இதற்கு முன்னதாக மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
அதனால், ஏற்பட்ட இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் நிதி கோரியுள்ளார். மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மட்டும் சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், மத்திய அரசு ரூ.450 கோடியை விடுவித்துள்ளது. அதேபோல், தென் மாவட்டங்களுக்கு மட்டும் 2000 கோடி ரூபாயை முதல் கட்டமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார். அதற்கு மத்திய அரசு இன்னும் நிதி அளிக்கவில்லை.
இருப்பினும், தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இரண்டு பெரிய வெள்ள பாதிப்புகளுக்குத் தேவைப்படும் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.900 கோடியை கொடுத்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.இதற்கிடையே மழை வெள்ளம் நிவாரணம் குறித்து மத்திய அமைச்சர் ஒருவர் பேசும்போது ‘நாங்கள் என்ன ஏடிம்மா’ கேட்கும்போதெல்லாம் பணம் தருவதற்கு என பேசியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பதில் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ நாங்கள் என்ன உங்கள் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம். மக்கள் வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என பேசி இருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சால் கடுப்பான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக கண்டனத்தை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அப்பன் வீட்டு பணத்தை கேட்கிறோமா என அமைச்சர் பேசுகிறார். அவரது பாஷை எப்போதும் அப்படி தான் இருக்கும். அவங்க அப்பன் வீட்டு பணமா என உதயநிதி கேட்கிறார். அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்துக் கொண்டு பதவி அனுபவித்து கொண்டு இருக்கிறாரா...? இன்னும் அவரு அரசியலில் மேலே செல்ல வேண்டும் என நினைக்கிறார் இல்லையா...? அந்த குடும்பமும் நினைக்கிறது இல்லையா..தனது பதவிக்கு ஏற்ற மாதிரி பேச வேண்டும்” என கடுப்புடன் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த கண்டிப்பு கண்டனத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வம்பிழுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னேனா..? மரியாதைக்குரிய நிதியமைச்சரை மீண்டும் கேட்டு கொள்கிறேன். என்னுடைய சொந்த விஷியத்துக்காக கேட்கவில்லை. தமிழக மக்கள் கடும் பேரிடரில் உள்ளனர். ஆனால், இதை பேரிடர் என்று மக்கள் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கின்றனர். 10 வருடம் பாஜக ஆட்சி தான் கடும் பேரிடர்.
நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளானர். அதில் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. அதனால் மீண்டும் நிவாரணத் தொகையை கொடுங்கள் என மரியாதை கேட்கிறேன். நான் என்ன அநாகரீகமாக பேசிவிட்டேன். அப்பன் என்பது கெட்ட வார்த்தையா..? என தெரியாமல் தான் கேட்கிறேன்.
இனி மரியாதைக்குரிய ஒன்றைய நிதியமைச்சர் உடைய மரியாதைக்குரிய அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா மாண்புமிகு அப்பா எப்படி வேண்டுமானலும் சொல்லலாம்” என மீண்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வம்பிழுத்துள்ளார்.