முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
‘டாக்டர் உ.வே.சா. பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் நேற்று அறி வித்தார்.
அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி கேள்விக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அளித்த பதில் வருமாறு:–
பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் சொன்ன கருத்துகள், அதேபோல, தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களுடைய தமிழ் பணிகள் குறித்தும் இங்கே மிக விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்க ஒன்று; அதைத் துறையின் சார்பில் ஏற்றுக்கொள்கின்றோம். இருந்தாலும், அவருடைய பிறந்த நாளை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்கப்படுமா என்று கோரியிருக்கின்றார்கள். ஏற்கெனவே, அதுசம்பந்தமாக உறுப்பினர் அவர்கள் அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். முதலமைச்சர் அவர்களோடு கலந்து பேசி, வருங்காலத்தில் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
ஆண்டுதோறும் அவருக்கு மாநில விழாவாக,அரசு விழாவாக, அவருடைய பிறந்த நாளை நாம் கடைப்பிடித்து வருகின்றோம். சென்னை, கடற்கரை சாலை யிலுள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம். உறுப்பினர் அவர்கள் சொன்னதைப்போல, அவருடைய பெயரிலே தமிழ்ப் புலவர்களுக்கு விருது வழங்குகிறோம். அதேபோல, அவருடைய பிறந்த ஊரான உத்தமனாதபுரத்தில் உள்ள அவருடைய வீடு இன்றைக்கு சிறப்பாக அரசின் சார்பில்பராமரிக்கப்படுகிறது. தொடர்ந்து உறுப்பினர் அவர்கள் பல்வேறு தகவல்களை இங்கே சொல்லியிருக்கின்றார்கள். அவை முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துகள்தான். நம்முடைய முதலமைச்சர் அவர்களோடு கலந்து பேசி, எதிர்காலத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.
அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறுக்கிட்டு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு :–
உறுப்பினர் கே.பி.முனுசாமி அவர்கள் இங்கே ஒரு கோரிக்கையை வைத்து, அந்தத் துறையினுடைய அமைச்சர் அவர்களும் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். முதலமைச்சர் அவர்களும் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை நான் உங்கள் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேநேரத்தில், இன்று நம்முடைய துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.