புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றது முதலே மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதி தரும் விடியல் பயணம் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். இதில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் கடந்த 5-9-2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்து உள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா இன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன் பெறுவார்கள். விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.