Parliament Election2024: ”மீண்டும் மக்கள் விரும்பும் தலைவன்” - நீயா, நானா போட்டியில் ராகுல், மோடி!
Parliament Election2024: ”பிரதமராக மீண்டும் மோடியை விரும்பும் மக்கள்” - கருத்து கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்ற தகவல் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை மூன்றாவதாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை எதிர்த்து ஒன்றிணைந்த கூட்டணி கட்சிகள், ‘இந்தியா’ என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் களமிறங்க உள்ளது. இந்தியா கூட்டணியில் மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால் இந்த தேர்தலில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதில் பாஜகவின் பலமாக பார்க்கப்படும் உத்தரபிரதேசத்தில் எந்தந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்கப்படும், என்பது குறித்து வாக்கு சதவீதம் குறித்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை ஒட்டி பிரபல ஊடகமும், ‘சி - வோட்டர்’ நிறுவனங்கள் இணைந்து உத்தரபிரதேச மக்களின் மனநிலையை அறியும் வகையில் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன்படி உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் பெருவாரியான இடங்களை கைப்பற்றலாம் என்றும், மொத்தம் உள்ள 80 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 73 முதல் 75 இடங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு நான்கில் இருந்து ஆறு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு இரண்டு இடங்களை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. வாக்கு சதவீதத்தை பொறுத்தமட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி 49 சதவீத வாக்குகளை பெறும், காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி 35 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 5 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சிகள் 11 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளது.
அதேநேரம் உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற கேள்வி மக்களிடையே கேட்கப்பட்டது. அதற்கு 50 சதவீதம் பேர் போட்டியிடலாம் என்றும், 33 சதவீதம் பேர் இருவரும் போட்டியிட வேண்டாம் என்றும் பதிலளித்துள்ளனர். பிரதமராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு, பிரதமர் மோடிக்கு 60 சதவீத பேரும், ராகுல் காந்திக்கு 30 சதவீதம் பேரும், இருவரும் வேண்டாம் என்று 8 சதவீதம் பேரும், தெரியாது என்று 2 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் புதியதாக மாநிலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், உத்தர பிரதேச மாநில புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட அவினாஷ் பாண்டே, தனது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி, இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். சமாஜ்வாதி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் இருப்பது போல், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை ‘இந்தியா’ கூட்டணிக்குள் வளைத்து போடுவதற்கான முயற்சிகளை அவினாஷ் பாண்டே செய்து வருகிறார். இரு கட்சிகளையும் இணைப்பது எளிதல்ல என்றாலும், அதற்கான முயற்சிகளை அவினாஷ் பாண்டே மூலம் காங்கிரஸ் செய்து வருகிறது.
அவினாஷ் பாண்டேவை மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதன் மூலம், கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சிப் பணிக்கு திரும்புவார்கள் என்று காங்கிரஸ் திட்டம் போடுகிறது. புதிய மாநில பொறுப்பாளரான அவினாஷ் பாண்டே தனது அனுபவத்தை சரியாக பயன்படுத்தி, உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வீழ்ச்சிக்கு உதவுவார் என்றே காங்கிரஸ் தலைமை காய்நகர்த்தி வருகிறது.