அணைகளில் இருந்து மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட கோரிக்கை
பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணைகளில் இருந்து மார்ச் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட ராஜேஷ்குமார் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணைகளில் இருந்து விவசாயத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்து விட்டு மறு ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி நாள் என்று அனைத்து அணைகளிலும் தண்ணீரை அடைத்து விடுவார்கள்.
அது போல் இந்த ஆண்டும் கடந்த 1.6.2023 தண்ணீர் திறந்து விடப்பட்டு நேற்று பிப்ரவரி மாதம் 29 ம் தேதி அனைத்து அணைகளையும் மாவட்ட நிர்வாகம் மூடியது. ஆனால் மாவட்டத்தில் உள்ள பல சானல்களில் தண்ணீர் கடைமடை பகுதிகளை இன்று வரை போய் சேரவில்லை.பட்டணங்கால் பிரதான கால்வாய் மூலம் திருவட்டார்,கல்குளம் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு வருவாய் வட்டங்களில் மொத்தம் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி குமரி மாவட்ட அணைகளில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்எல்ஏ இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.