தலைமைக்கு விசுவாசமாக இல்லை - அதிமுக நிர்வாகிகள் மீது இபிஎஸ் அதிருப்தி
அதிமுக நிர்வாகிகள் பலரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை, அதிமுக நிர்வாகிகளிடம் தேர்தலுக்காக பணம் கொடுத்தால் அது கடைசி நிர்வாகி வரை சென்று சேர்வதில்லை. கிடைத்த பணத்தை பல நிர்வாகிகள் சுருட்டி கொள்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகளிடம் அதிருப்தியுடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை நிர்வாகிகளை சந்தித்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை, மத்திய சென்னை வடசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள நாடாளுமன்ற தொகுதிகளை சார்ந்த வேட்பாளர்கள், 17 மாவட்ட பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கப்பின் நேற்று நேரில் சந்தித்தனர்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்ட சென்னை மற்றும் சுற்றியுள்ள தலைமை கழகச் செயலாளர்களும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். , நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் ராயபுரம் மனோ, ஜெயவர்த்தன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர் எஸ் ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, கே.பி. கந்தன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களும் சந்தித்தனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து தேர்தலுக்கு பிறகு இன்று நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
அந்த கூட்டத்தில்,அதிமுக நிர்வாகிகள் முன்பு போல விசுவாசமாக இல்லை, கடமைக்கு வேலை செய்கிறீர்கள் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நிர்வாகிகளிடம் இல்லை. அதிமுக நிர்வாகிகள் பலரின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை, அதிமுக நிர்வாகிகளிடம் தேர்தலுக்காக பணம் கொடுத்தால் அது கடைசி நிர்வாகி வரை சென்று சேர்வதில்லை. கிடைத்த பணத்தை பல நிர்வாகிகள் சுருட்டி கொள்கிறார்கள். திமுக திட்டமிட்டு பல அணிகள் அமைத்து உணர்வோடு வேலை செய்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் இந்த முறையும் நமக்கு வாக்களிக்கவில்லை. சொத்து வரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தும் அவற்றை மக்களிடம் அதிமுக நிர்வாகிகள் சரியாக கொண்டு சென்று சேர்க்கவில்லை. இந்த பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சென்று இருந்தால் நகரங்களில் மீண்டும் திமுக நல்ல வாக்கு சதவீதம் பெற்றிருக்காது. சென்னையில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் சரியாக நடைபெறவில்லை. எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு விசுவாசமாக இல்லை. வாக்குக்கு பணம் கொடுத்த சில இடங்களில் அது முறையாக சென்று வாக்காளர்களுக்கு சேரவில்லை என்று பேசியுள்ளார்.