டெல்டா மாவட்ட மக்களுக்கு திமுக தொடா்ந்து துரோகம்: அன்புமணி
டெல்டா மாவட்ட மக்களுக்கு திமுக தொடா்ந்து துரோகம் செய்வதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டெல்டா மாவட்ட மக்களுக்கு திமுக தொடா்ந்து துரோகம்: அன்புமணி ராமதாஸ் கும்பகோணம் உச்சி பிள்ளையாா் கோயில் அருகே மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளா் ம.க. ஸ்டாலினை ஆதரித்து நேற்று இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்தை உருவாக்குவது சாதாரண திட்டம்தான்.
இதற்காக பல போராட்டங்கள் நடத்தியும் இன்னும் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை. இத்தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றியை உறுதி செய்தால், அடுத்து 2026இல் திமுக, அதிமுக அல்லாத கூட்டணி ஆட்சி அமையும்.
இதன் மூலம் டெல்டா பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முதல்முதலில் பாமகதான் குரல் கொடுத்தது. இது குறித்து பாமக வலியுறுத்தியதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் 57 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மட்டுமே ஆட்சி செய்தது. இவா்களால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. எந்தவித தொலைநோக்குத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாட்டுக்கும், தமிழா்களுக்கும் திமுக, காங்கிரஸ் கூட்டணி துரோகம் செய்து வருகிறது. காவிரியில் தண்ணீா் தர முடியாது என்றும், மேக்கேதாட்டில் அணைக் கட்டுவோம் எனவும் கூறும் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.
டெல்டா மக்களுக்கு திமுக தொடா்ந்து துரோகம் செய்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும், 50 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பாமகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.