அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்க திமுக அரசு ஆயத்தமாகி வருகிறது: சீமான்

அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்க திமுக அரசு ஆயத்தமாகி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-05 05:50 GMT

சீமான் அறிக்கை

அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்க திமுக அரசு ஆயத்தமாகி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தி.மு.க. அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அண்ணாவின் உயிர்க்கொள்கை இருமொழி கொள்கை என்று கூறிவிட்டு மறைமுகமாக மும்மொழி கொள்கையை தி.மு.க. அரசு திணிக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே நடைமுறையில் இருந்துவருகிறது. இந்திய ஒன்றியத்தை ஆண்ட அன்றைய காங்கிரஸ் அரசும் அதற்குத் துணைநின்ற தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசும் இந்தி மொழியை வலுக்கட்டாயமாகத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கட்டாயப் பாடமொழியாகத் திணிக்க முயன்றபோது, துணிந்து எதிர்த்து நின்று போரிட்டு வென்றது தமிழர் மண். உயிர்மொழியாம் நம் தாய்மொழி தமிழ் காக்கும் அம்மொழிப்போரில் மானத்தமிழ் மறவர்கள் தீரத்துடன் தங்கள் இன்னுயிரை ஈகம் புரிந்தனர். அவர்களின் தன்னலமற்ற ஈகத்தினைத் தங்களுக்குச் சாதகமாக்கி, ஆட்சி - அதிகாரத்தை அடைந்த அண்ணா தலைமையிலானா தி.மு.க. அரசு, தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கையாக நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்தது. அதன்படி திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்ட கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருமொழிகொள்கையை நடைமுறைப்படுத்தி, பல தலைமுறைகள் பாடம் பயின்று பட்டம் பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பது பச்சைத்துரோகம் இல்லையா? தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உதவ தமிழ், ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டும் போதாதா? இந்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாட்டில் இந்தி தெரிந்த பெண்கள் மட்டும்தான் வந்து வாழ்கிறார்களா? இதர மொழி பேசும் பெண்கள் வந்து வாழவில்லையா? அப்படிப் பார்த்தால் அவர்களுக்கு உதவ அந்தந்த மொழிகள் தெரிந்த பெண்களை நியமிக்க வேண்டி வருமே? அதனால்தான் தமிழ்நாட்டில் தொடர்புகொள்ள தமிழ், இதர மாநில மக்களைத் தொடர்புகொள்ள ஆங்கிலம் என்பதுதானே அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் முழங்கியது? அண்ணாவின் அத்தகைய இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா ஏற்கனவே, தமிழ்நாடு அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை பணிகளுக்கு சமஸ்கிருதம் தெரிந்தால்தான் விண்ணப்பிக்க முடியும் என்று மும்மொழியைத் திணிக்க தி.மு.க. அரசு முயன்றபோதே அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டித்து எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கவுள்ள பெண்களுக்கான உதவி மையத்திலும் இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது அப்பட்டமான இந்தி திணிப்பே அன்றி வேறென்ன? ஏற்கனவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டின் அரசுப்பள்ளிகளுக்குப் போதிய நிதியை ஒதுக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்கவும், அதன் மூலம் அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்கவும் தி.மு.க. அரசு ஆயத்தமாகி வருகிறது. அதன் முன்னோட்டமே இத்தகைய இந்தி திணிப்பு அறிவிப்புகளாகும். ஆகவே, மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற தி.மு.க. அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும் எனவும் எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News