ஆளுநர் உரையல்ல, சபாநாயகர் உரை; அரசின் சுயவிளம்பரத்தை தவிர வேறு எதுவும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

யார் அந்த சார்? என கேட்டால் தமிழக அரசு பதற்றம் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2025-01-06 07:30 GMT

Edapadi palanisamy

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக கூறி உரையாற்றாமல் அவையில் இருந்து வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சட்டசபையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யார் அந்த சார்? என கேட்டால் தமிழக அரசு பதற்றம் கொள்கிறது. ஆளுநர் உரையில் எந்த ஒரு புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ஆளுநர் உரையில் அறிவித்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. ஆளுநர் உரை சபாநாயகர் உரையாக மாற்றப்பட்டு விட்டது. திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது தான் இந்த அரசின் சாதனை. கருப்பை கண்டு முதலமைச்சர் ஏன் இவ்வளவு அச்சப்படுகிறார். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எல்லா இடங்களிலும் கஞ்சா தங்குதடையின்றி கிடைக்கிறது. சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். செயலற்ற அரசாங்கமாக தமிழக அரசு உள்ளது. ஆளுநர் உரையை சபாநாயகர் படிப்பது இதுவே முதன்முறை. சட்டசபையில் வாசிக்கப்பட்டது சபாநாயகர் உரையே. திமுக ஆட்சியில், ஆளுநர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறிவிடுகிறது. உரையை பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் மாதிரி பெரிதாக உள்ளதே தவிர, உள்ளே ஒன்றும் இல்லை. இந்த உரையில் திமுக அரசின் சுயவிளம்பரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. ஆளுநர் புறக்கணித்து விட்டுச் செல்லவில்லை; திட்டமிட்டே ஆளுநரை உரையாற்றக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

Tags:    

Similar News