தேர்தல் ஆணையத்தின் தேதி அறிவிப்பும் சந்தேகங்களும்: ஜவாஹிருல்லா
தேர்தல் ஆணையத்தின் தேதி அறிவிப்பும் சந்தேகங்களும் என்ற தலைப்பில் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தேதி அறிவிப்பும் சந்தேகங்களும் என்ற தலைப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் பத்திரிகை அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்து முறை தமிழகத்திற்கு வருகை தந்திருக்கின்றார். பெருமழை வெள்ளத்தில் தமிழகம் மூழ்கித் தவித்தபோது கூட ஆறுதல் சொல்ல வராதவர்,
தமிழ்நாட்டிற்கான நிவாரண உதவியை சிறிதளவு நீட்டாதவர் இந்த முறை தொடர்ச்சியாக ஐந்து முறை தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதும் அவருடைய இறுதி வருகையின் போது தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதியை அறிவிப்பதும் அதில் முதல் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் என்று அறிவிப்பதும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்திருக்கின்றது. இதைத் தற்செயலானதாக பார்க்க முடியவில்லை.
இது திட்டமிட்டு நடந்த நிகழ்வாகவே பார்க்க முடிகின்றது. தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஏப்ரல் 19 .2024 வெள்ளிக்கிழமை அன்று வருகின்றது. வெள்ளிக்கிழமை என்பது முஸ்லிம்களுக்கு ஒரு புனிதமான நாளாகும். வேறு பல நாட்கள் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் அதிகமாக வாக்களித்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்தது போன்ற ஒரு தோற்றமும் ஏற்படுகின்றது.
இந்த ஐயங்களுக்கு தேர்தல் ஆணையம் விடை தர வேண்டும். தேர்தல் தேதிக்கும் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதிக்கும் மிக நீண்ட இடைவெளி இருக்கின்றது. ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு தனியார் இடங்களிலும் கடைகளிலும் கிடந்த முன்மாதிரிகளை பார்த்திருக்கின்றோம்.
எனவே இந்த தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்கின்ற அச்சம் மக்கள் மனதிலே உச்சமாக எழுந்திருக்கின்றது. இதற்கான விடைகளை தேர்தல் ஆணையம் தான் தர வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பும் தமிழகத்திற்கு தொடர்ச்சியான பிரதமர் வருகையும் வாக்காளர்கள் மனதில் மிக வலிமையான சந்தேகங்களை உருவாக்கி இருக்கின்றன என்பதை இங்கே பதிவு செய்கிறோம்.