வெளியானது ஹாட் லிஸ்ட் - சாயம் வெளுத்த அரசியல் கட்சிகள்
நாட்டிலேயே அதிகமாக பாஜகவுக்கு 6 ஆயிரத்து 60 கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி கொடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி கால அவகாசம் கேட்டு வெளியான தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பட்டியலில் எதிர்பார்க்காத அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கு பணம் கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளே தங்களுக்குள் அதிர்ச்சி ஆகும் அளவுக்கு எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது, எந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு பணத்தை வாரி இரைத்துள்ளன என்பது குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
ஊழலுக்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் தேர்தல் பத்திரங்கள் எஸ்பிஐ வங்கி வெளியிட்ட பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 300 பக்கத்திற்கும் மேற்பட்ட இரண்டு பட்டியல்களை எஸ்பிஐ வங்கி கொடுத்துள்ளது.
முதல் பட்டியலில் தேர்தல் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், அவரை எந்தெந்த தேதிகளில் வாங்கப்பட்டன, பத்திரத்தின் தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பட்டியலில் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு, எந்த தேதியில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி அதிகம் நிதி பெற்ற கட்சியாக நாட்டை ஆளும் பாஜக உள்ளது. அடுத்ததாக இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக, அதிமுக கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிகமாக பாஜகவுக்கு 6 ஆயிரத்து 60 கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆயிரத்து 609 கோடி ரூபாயும், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஆயிரத்து 421 கோடி ரூபாயும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு ஆயிரத்து 214 கோடி ரூபாயும் நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 775 கோடி ரூபாயும், திமுக கட்சிக்கு 639 கோடி ரூபாயும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 337 கோடி ரூபாயும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 218 கோடி ரூபாயும், சிவசேனா கட்சிக்கு 159 கோடி ரூபாயும் நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஷ்டிரிய ஜனதா தல் கட்சிக்கு 72 கோடி ரூபாயும், ஆம் ஆத்மி கட்சிக்கு 65 கோடி ரூபாயும், ஜனதா தல் கட்சிக்கு 43 கோடி ரூபாயும், ஜனசேனா கட்சிக்கு 21 கோடி ரூபாயும், சமாஜ்வாதி கட்சிக்கு 14 கோடி ரூபாயும், அதிமுகவுக்கு 6 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இப்படி அதிக நன்கொடை பெற்ற கட்சிகளின் லிஸ்ட் ஒருபக்கம் இருக்க, அதிக பணத்தை வாரி இரைத்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது. அதில், நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது. மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. கிவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் 410 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. ஹல்டியா எனர்ஜி லிமிடெட் 377 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. எஸ்ஸேஸ் சுரங்க நிறுவனம் 225 கோடி நன்கொடை கொடுத்துள்ளது.
வேதாந்தா நிறுவனம் 401 கோடியும், பார்த்தி ஏர்டெல் நிறுவனம் 198 கோடியும், ஜிண்டால் நிறுவனம் 123 கோடியும், டிஎல்எப் நிறுவனம் 130 கோடியும், சென்னை கிரீன்ஹூட்ஸ் நிறுவனம் 105 கோடியும் கொடுத்துள்ளது. எம்கேஜே என்டர்பிரைசஸ் நிறுவனம் 192 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. வெஸ்டன் யு பி பவர் ட்ரான்ஸ்மிஷன் நிறுவனம் 220 கோடி ரூபாய் நன்கொடையும். யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 162 கோடி நன்கொடைகளை வாரி கொடுத்துள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. அதில், 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.