ஆளுநரின் காந்தி குறித்த விமர்சனம் கண்டனத்துக்குரியது - முத்தரசன்

மகாத்மா காந்தியை பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததை ஏற்கமுடியாது. அது கடும் கண்டனத்துக்குரியதாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-26 01:50 GMT
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது: ராமன், சீதா, லட்சுமணனை காண்பித்து தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை. நாட்டை ஆண்ட மன்னர்கள் எல்லாம் கடவுள் என்றால், நமது சோழ மன்னருக்கு கோயில் கட்டி, அவரை கடவுளாக்கி இருக்க வேண்டும். ஆனால், அவருக்கே தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குள் அனுமதி கிடையாது.

பாஜக கடந்த தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியதை கூறி, வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தொடர்ந்து சர்ச்சைக்குரியவராகவே இருக்கிறார். கண்ணியமான பதவியில் இருக்கும் அவர், களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறார். மகாத்மா காந்தியை பற்றி அவர் விமர்சனம் செய்ததை ஏற்கமுடியாது. அது கடுமையான கண்டனத்துக்குரியதாகும். இண்டியா கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளதால், ஆங்காங்கே சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆளுநர் தேநீர் விருந்துக்கு எங்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். அதை நாங்கள் நிராகரித்துள்ளோம். எங்கள் கட்சி சார்பில் குடியரசு தின விழாவை கொண்டாடுவோம் எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News