ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக சந்திரகுமார் அறிவிப்பு!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளரை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா, திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 2023-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கலும் நேற்று தொடங்கியது. மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை களம் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த தொகுதியில் தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என, கள ஆய்வுக்கு சென்ற முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டானிடம் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதேநேரம் அந்த தொகுதியை விட்டுக்கொடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறிவந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார். அதன்படி இந்த தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் குமார் களம் இறக்கப்படுவார் என பேசப்பட்டது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் போட்டியிடுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று இரவு தெரிவித்து இருந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.