திமுக அறிமுக கூட்டத்தில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி பங்கேற்பு
சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியுள்ளது.
சட்டமன்ற தேர்தலின் போது திமுக தெரிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ள என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் குறிப்பிட்டார்.
நாமக்கல் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான கொ.ம.தே.க.,, சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் அறிமுகம் கூட்டம், திமுக செயல் வீரர்கள் கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தலைமை வகித்தார்.
தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து பேசினார். விழாவில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மேலும் பேசியது: திமுக அரசு பொறுப்பேற்றவுடன் நாங்கள் என்னென்ன வாக்குறுதி அளித்தோமோ அத்தனையும் செயல்படுத்தியிருக்கிறோம். மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, விவசாய கடனை தள்ளுபடி செய்து மீண்டும் விவசாயிகளுக்கு கடன் வழங்கல் என இத்தனையும் 2 ஆண்டுகளில் செய்திருக்கிறோம். ராசிபுரம் தொகுதிக்கு ரூ.854 கோடி மதிப்பில புதிய குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் வெண்ணந்தூர் நாமகிரிப்பேட்டை,புதுச்சத்திரம் ஒன்றியம், அத்தனூர், சீராப்பள்ளி புதுப்பட்டி போன்ற பகுதிகள் பயன் பெறும். ரூ.54 கோடி மதிப்பில் ராசிபுரத்தில் மாவட்ட மருத்துவமனை கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில் கொ.ம.தே.க. பொதுச்செயலர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ., முன்னாள் எம்பி்., ஏ.கே.சின்ராஜ், முன்னாள் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி, நகரச் செயலர் என்.ஆர்.சங்கர், ஒன்றியக்குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, பொருளாளர் ஏ.கே.பாலசந்தர்,
நகர்மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஏ.சித்திக், முன்னாள் தலைவர் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன், நகர தலைவர் ஸ்ரீராமுலு ஆர் முரளி, கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலர் எஸ்.கந்தசாமி , மதிமுக அவைத் தலைவர் ஜோதிபாசு, மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் ஜெ.ஜெயபிரகாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.