யாருமே தொடமுடியாத அளவுக்கு இருக்கும் திமுக கோட்டைகள் - கருத்துக்கணிப்பு கூறும் உண்மை..?
தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, கதிர் ஆனந்த், அருண் நேரு ஆகியோர் ஸ்டார் வேட்பாளர் அந்தஸ்தில் உள்ளனர்.
நடப்பு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் களமிறங்குகிறது. நேரடியாக 21 தொகுதிகளில் திமுக போட்டியிட்டாலும் அதில் 11பேருக்கு புதிதாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 பெண்கள், 2 மருத்துவர்கள், 6 வழக்கறிஞர்கள் புதிதாக களம் காண்கின்றனர். கொங்கு மண்டலத்தை பாஜக குறி வைத்து தீவிர பிரசாரம் செய்து வருகிறது. ஒரு பக்கம் அதிமுகவும், மற்றொரு பக்கம் நாம் தமிழர் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்குமுனை போட்டியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை ஒரு கணிப்பாக பார்க்கலாம்.
நடக்கும் மக்களவை தேர்தலில் வடசென்னையில் கலாநிதி வீராசாமி, தென்சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய சென்னையில் தயாநிதிமாறன், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரத்தில் செல்வம், அரக்கோணத்தில் ஜகத்ரட்சகன், வேலூரில் கதிர் ஆனந்த், தர்மபுரியில் ஏ மணி, திருவண்ணாமலையில் சி.என்.அண்ணாதுர, ஆரணியில் தரணிவேந்தன், களக்குறிச்சியில் மலையரசன், ஈரோட்டில் கே.இ.பிரகாஷ், நீலகிரியில் ஆ ராசா, கோவையில் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சியில் கே ஈஸ்வரசாமி, தஞ்சையில் எஸ் முரசொலி, தேனியில் தங்க தமிழ்செல்வன், தூத்துக்குடியில் கனிமொழி, தென்காசியில் ராணி, காஞ்சிபுரத்தில் கே செல்வம், பெரம்பலூரில் அருண் நேரு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, கதிர் ஆனந்த், அருண் நேரு ஆகியோர் ஸ்டார் வேட்பாளர் அந்தஸ்தில் உள்ளனர். இதில் இந்தியாவின் 6வது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இருக்கும் மத்திய சென்னையில் கடந்த 2019ம் ஆண்டு போட்டியிட்ட தயாநிதி மாறன் 4 லட்சத்து 48 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். கடந்த தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 57 சதவீதமாக இருந்தது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவின் வாக்கு வங்கி 18 சதவீதமாக இருந்தது. நாம் தமிழர் கட்சிக்கு 4 சதவீதம் மட்டுமே வாக்குவங்கி இருந்தது. இம்முறையும் அதேதொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறன் கிட்டத்தட்ட 4 லட்சங்களுக்கு மேல் வாக்கு பெற்று வெற்றிப்பெறுவார் என கணிப்புகள் கூறுகின்றனர்.
இதேபோல், தமிழ்நாட்டின் மிகப்பெரிய நாடாளுமன்ற தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் சிட்டிங் எம்பியாக டி.ஆர். பாலு உள்ளார். கடந்த தேர்தலில் 7 லட்சத்து 93 ஆயிரம் வாக்குகள் பெற்ற டி.ஆர். பாலு அமோக வெற்றிப்பெற்றார். திமுகவின் வாக்கு சதவீதம் 56 ஆக இருந்தது. அதிமுக, பாஜக கூட்டணிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன. நாம்தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 6 ஆக இருந்தது. இம்முறையும் டி.ஆர். பாலுவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக திமுகவின் ஸ்ட்ராங்க் தொகுதி லிஸ்டில் வேலூர் உள்ளது. திமுகவின் பலமாக பார்க்கப்படும் துரைமுருகனின் கோட்டையாக வேலூர் உள்ளது. கடந்த தேர்தலில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டு கிட்டத்தட்ட 5 லட்சம் வாக்குகளில் வெற்றிப்பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 13 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியடைந்தார். வேலூரில் திமுகவின் வாக்கு வங்கி 47 சதவீதமாகவும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு 46 சதவீதமாகவும் இருந்தது.
இம்முறை திமுகவின் வேலூர் கோட்டையை தகர்க்க பாஜக வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. அதில் ஒன்றாக தமிழகத்திற்கு விசிட் செய்துள்ள மோடி தனது பாஜக பொதுக்கூட்டத்தை வேலூரில் வைத்தார். பிரமாண்ட கூட்டத்தில் பெண்களின் காலில் விழுந்து வணங்கிய மோடி திமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
இந்த வரிசையில் திமுகவுக்கு ஆதரவு தொகுதியாக நீலகிரியும் உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்ட ஆ.ராசா 5 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் பெற்றி எம்பி ஆனார். ஆ.ராசாவின் கோட்டையாக பார்க்கப்படும் நீலகிரியையும் பாஜக டார்கெட் செய்து களமாடி வருகிறது.
இதேவரிசையில் ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுவது தூத்துக்குடி. சிட்டிங் எம்பியான கனிமொழிக்கு தூத்துக்குடி இரண்டாவது வீடாகவே மாறியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மாநில தலைவராஅட்க இருந்த தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழி 5 லட்சத்து 63 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். தூத்துக்குடி கனிமொழியின் கோட்டையாக இருப்பதால் இம்முறை அந்த பக்கம் தமிழிசை சௌந்தரராஜன் போகவில்லை. இந்த தேர்தலில் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு பலமாகவே உள்ளதாக பார்க்கப்படுகிறது.