ஒரு வீடியோவால் வந்த வினை - வேட்பாளரையே மாற்றி அதிரடி காட்டிய திமுக

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

Update: 2024-03-22 04:57 GMT

சூர்யமூர்த்தி - மாதேஸ்வரன்

லோக் சபா தேர்தலை ஒட்டி தமிழக அரசியலில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதேநெரம், அரசியல் கட்சிகளின் சர்ச்சைகளும் எழுந்து அதிருப்தியை தருகின்றன. எதிர்கட்சியை விமர்சித்து போஸ்டர் அடித்து ஒட்டுவதில் இருந்து வேட்பாளர்களின் சர்ச்சை பேச்சு வரை தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். எல்லாம் ஒரு வீடியோவால் வந்த வினை என அந்த வேட்பாளாரே புலமும் அளவுக்கு அப்படி என்ன தான் நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது தோழமை கட்சிகளின் கூட்டணியில் களமிறங்குகிறது. தேர்தல் என்ற பேச்சு அடிப்பட்டதும் முதலில் கூட்டணியை உறுதி செய்த திமுக, தங்களுடன் இணைந்து களத்தில் இறங்கும் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. அதன்படி அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை தூக்கி கொடுத்த திமுக, நேரடியாக 21 தொகுதிகளில் களமிறங்குகிறது. புதுச்சேரியையும் சேர்த்து எஞ்சி இருக்கும் 19 தொகுதிகளில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக, மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை திமுக தலைமை ஒதுக்கியது. அந்த தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென சூரியமூர்த்தி வேட்பாளர் ரேஸில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் சோஷியல் மீடியாவில் வைரலான ஒரே ஒரு வீடியோ மட்டும் தான். சூரியமூர்த்தி பேசியதாக இணையத்தில் டிரெண்டான அந்த வீடியோவில், சாதி ரீதியிலான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. திராவிட மாடல் ஆட்சி, சாதி ஒழிப்பு, அனைவரும் சமம் என பேசும் திமுக தலைவர் ஸ்டாலின், எப்படி இந்த வேட்பாளரை தேர்தலில் களமிறக்குகிறார்..? என கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

இதனால் திமுக தலைமை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நெருக்கடி கொடுக்க கடைசியாக வேட்பாளரையே மாற்றும் நிலை ஏற்பட்டது. நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பெயர் திரும்ப பெறப்பட்டது.  அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் தேர்தலில் போட்டியிடுவார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது. இதனால் சூரியமூர்த்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இணையத்தில் வைரலான வீடியோ குறித்து விளக்கம் அளித்த சூரிய மூர்த்தி , தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்றும், அதுபொய்யான வீடியோ என்றும் கூறி வருகிறார். 

Tags:    

Similar News