”டார்கெட் திமுக” என கம்பு சுற்றும் பிரதமர் மோடி..!
திமுகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் என திராவிட கட்சிகளை கையில் எடுத்துக் கொண்டு தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார் பிரதமர் மோடி.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பிடிவாதமாக இருக்கும் நிலையில், இருவேறு வியூகங்களை வகுத்து அதிமுகவை தனது பக்கம் இழுக்க கம்பு சுற்றி வருகிறது பாஜக. அப்படி அதிமுகவை தனது வழிக்கு வர வைக்க பாஜக எந்த வியூகங்களை வகுத்து வருகிறது என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் சில தொகுதிகளாவது வெற்றிப்பெற முடியும் என தீவிர முனைப்புக் காட்டி வரும் பாஜக, அதற்காக சக்தி வாய்ந்த கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. கடந்த முறை அதிமுகவுடன் தேர்தலை சந்தித்த பாஜக இம்முறை கூட்டணியில் இருந்து பிரிந்துள்ளது. பாஜகவுடன் எந்தவித உறவும் இல்லை என அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு மட்டும் பாஜகவுடன் இணைந்துள்ளது.
ஆனாலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்து தமிழகத்தின் சில பகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு இருப்பதால் அதை தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தூது அனுப்பிய பாஜக, ஏமாற்றத்தையே சந்தித்தது. இருந்தாலும் சோர்ந்து போகாத பாஜக தலைமை டார்கெட் அதிமுக என்ற வகையில் ஆள் சேர்ப்பு வியூகத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் முக்கியமான தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவில் ஃபீல்டு அவுட் ஆன பெரும் தலைகள் மட்டுமே பாஜகவில் இணைந்தனர். அதிமுகவில் செல்வாக்கு இல்லாதவர்கள் கட்சியில் இணைந்ததால்பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை என்ற பேச்சு அடிப்பட்டதால் பாஜகவின் ஆள் சேர்ப்பு வியூகம் தவிடுபொடியானது.
அடுத்தக் கட்டமாக பல்லடம் மாதப்பூரில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். அப்போது நடந்த பாஜகவின் பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியினர் குறிப்பாக அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிக்கு யாரும் வராததால் அப்செட் ஆன பிரதமர் மோடி அண்ணாமலைக்கு வார்னிங் கொடுத்து சென்றதாக கூறப்பட்டது. இந்த முறையும் பாஜகவின் பிளான் சொதப்பியது.
இப்படி அண்ணாமலை போட்ட திட்டங்கள் எல்லாமே சொதப்பலில் முடிந்ததால், அட போங்கப்பா களத்தில் நானே இறங்குகிறேன் என செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற தேர்தலில் டார்கெட் தமிழ்நாடு என்ற கொள்கை மாறி, டார்கெட் திமுக என்ற கோணத்தில் பிரதமர் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களாக அடிக்கடி தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, திமுகவை குடும்ப கட்சி, ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி, குடும்பத்தை வளர்க்கும் கட்சி என கடுமையாக விமர்சித்தார்.
இதுமட்டுமில்லாமல், குலசேகரப்பட்டினத்தில் நடந்த ராக்கெட் ஏவுதளம் திறப்பு விழாவில், பங்கேற்ற தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் வேலுவின் பெயர்களை உச்சரிக்காமல் ஒதுக்கினார். இப்படி திமுகவை வெளிப்படையாக விமர்சிப்பதன் மூலம் மக்கள் மனதில் மாற்றுக் கட்சி என்ற எண்ணத்தை கொண்டு வரலாம் என்ற கணக்கு போட்டு பேசி வரும் பிரதமர் மோடி, அதே வேளையில் அதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலித மற்றும் எம்ஜி ஆரை புகழ்ந்து பேசினார்.
மோடியின் இந்த செயலுக்கு பின்னாலும் வலுவான காரணம் உள்ளது. அது தான் புராஜெக்ட் கொங்குமண்டலம். ஆரம்பத்தில் இருந்து கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. திமுக திணறுவது கொங்கு மண்டலத்தில் தான். இதை சாதகமாக்க முயற்சிக்கும் பாஜக தலைமை, அதிமுகவை தங்கள் பக்கம் இழுத்தால் கொங்கு மண்டலத்தை பிடித்து விடலாம் என திட்டம் தீட்டி காய் நகர்த்தி வருகிறது. இதனால் தான் பாஜகவின் பொதுக்கூட்டம், ஆட்சேர்ப்பு நிகழ்ச்சி என அனைத்தும் கொங்கு மண்டலத்தை குறி வைத்தே நடைபெறுகின்றன. வடமாநிலங்களை போல் தமிழ்நாட்டில் அரசியல் செய்தால் மட்டும் மக்களை வெற்றிப்பெற முடியாது என்பதை நன்கு உணர்ந்த பிரதமர் மோடி, திமுகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் என திராவிட கட்சிகளை கையில் எடுத்துக் கொண்டு தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார்.