ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டி

திமுக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நவாஸ் கனியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) அறிவித்துள்ளது.

Update: 2024-03-03 04:59 GMT

 நவாஸ் கனியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்த கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை மீண்டும் ஒதுக்கிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் எம்.பி.யாக இருந்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் கே. நவாஸ் கனியையே மீண்டும் அங்கு நிறுத்துகிறோம். ஏணி சின்னத்தில் அவா் போட்டியிடுவாா். தோ்தல் பணிக் குழு, நிதிக் குழு, பிரசாரக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஜனநாயகம், மதச்சாா்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை குலைத்து மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேடும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிடும். கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்தால் வரவேற்போம். அவா்களுடன் இணைந்து தோ்தலை சந்திப்பது மகிழ்ச்சிதான். மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியானது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மத்தியில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றாா் அவா். முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News