ஆறுதல் கூற சென்றோர் மீது வன்கொடுமை வழக்கா?: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செல்லத்துரை என்ற இளைஞரின் குடும்பத்தினரையும், ஊர்மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க, மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.சிஎஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் மக்களாட்சிக்கு பதிலாக களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியை விட மிக மோசமான ஆட்சி நடைபெறுவதைத் தான் அற்பத்தனமான இந்த அடக்குமுறைகள் நிரூபிக்கின்றன. மஞ்சக்கொல்லையை அடுத்த பு.உடையூர் கிராமத்தில், பாதையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை வழியை விடும்படி கூறியதற்காக செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டரை அவர்கள் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவளது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை சந்தித்து பா.ம.க மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறியுள்ளார். செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இதைத் தவிர வேறு எந்த செயலிலும் பா.ம.க.வினர் ஈடுபடவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைக் கடந்து, பட்டியலின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பாட்டாளி மக்கள் கட்சியினர் பேசவில்லை. ஆனால், அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கொடிக் கம்பத்தை தாக்கும்படி மஞ்சக்கொல்லையை சேர்ந்த அருள் செல்வி என்பவரை செல்வமகேஷ் தூண்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வ மகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வன்கொடுமை வழக்கை கடலூர் மாவட்ட காவல்துறை பதிவு செய்திருக்கிறது. காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சியே முதல் தகவல் அறிக்கையை எவ்வாறு பதிவு செய்வது? எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்வது? என்பது குறித்தது தான். அத்தகைய பயிற்சியை கடலூர் மாவட்ட காயல்துறையினர் முறையாக பெற்றிருந்தால் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்திருக்கவே மாட்டார்கள். மஞ்சக்கொல்லை கிராமத்தில் செல்வமகேஷ் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளும் காணொலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்த இடத்திலும் பட்டியலினத்தவருக்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவ்வாறு இருக்கும்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அடுத்ததாக, விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தைத் தாக்கிய அதே பெண்மணி தான், பா.ம.கவின் கொடிக் கம்பத்தையும் கடப்பாரைக் கொண்டு தாக்கியிருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது அவர பாமக மாவட்ட செயலாளர் செய்வ மகேஷ் தான் தூண்டி விட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கூறியதை நம்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஆறாம் அறிவு இல்லையா? எஸ்.சிஎஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்வதற்கு முன் முறையாக புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது. ஆனால், அவற்றை மதிக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினால் தாக்கப்பட்ட தரப்பினர் மீதே காவல்துறை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த ஒட்டுமொத்த சதியிலும் காவல்துறையும் பங்காளியாக இருக்குமோ? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 1996-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர். அன்றைய காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் விமர்சிக்கும்போது காவல்துறையினாரின் ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது என்று கூறினார். ஆனால், கடலூர் மாவட்ட நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது காவல்துறையினரின் ஈரல் மட்டுமல்ல.. இதயம், மூளை ஆகியவையும் முழுமையாக அழுகி விட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் சட்டத்திற்கு ஒவ்வாத இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்தை காவல்துறை செய்திருக்காது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை அறுப்போம் என்று கொக்கரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க துப்பற்ற காவல்துறை, எந்தத் தவறும் செய்யாத பா.ம.க. மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கொடுமைப்படுத்துகிறது. இது அடக்குமுறையின் உச்சமாகும். கடலூர் மாவட்டத்தில் வன்னிய மக்கள் மீது இப்படி ஒரு வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல கோவையில் செந்தில் பாலாஜியின் 'கம்பேக்'கை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது. கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், காவல்துறையினரின் செயல்பாடுகளையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது கனப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது. ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும் எதிர்கொள்வது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு எனது திண்டிவனம் வீட்டில் காவல்படைகளை குவித்து எனது வீட்டை சோதனை செய்ததாக செய்தி பரப்பியது, பு.தா. அருள்மொழி உள்ளிட்ட பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது, விழுப்புரத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் நடத்திய பேரணியில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. கடலூர் புதுச்சத்திரத்தில் இராஜேந்திரன் என்ற தொண்டரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது உள்ளிட்ட ஏராளமான அடக்குமுறைகளை 1989-ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை இன்று தனயன் செய்கிறார். அவ்வளவு தான். திமுக அரசின் அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும் முறியடிக்கும் திறனும் உறுதியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.