பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு - மேலும் ஒரு சாட்சி பல்டி
அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறர்சாட்சி அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2,64,644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு ரூ:28,36,40,600 இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 18 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 14 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்
அப்போது ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 5 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி. ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் நேற்று அரசு தரப்பு 19-வது சாட்சியாக ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளரான ராமமூர்த்தி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், சம்பவ இடத்துக்கு நான் ஆய்வுப்பணிக்கு செல்லவே இல்லை, உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன்பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன், எனக்கும் இவ்வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, தனக்கு எதுவும் தெரியாது என்றுகூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். இந்த சாட்சியத்தை பதிவு செய்த மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை மீண்டும் இன்று நடைபெறும் என உத்தரவிட்டார். .