செல்வகணபதியை திணறடித்த தேர்தல் அதிகாரிகள் - கடைசியாக நடந்த டிவிஸ்ட்

2015ஆம் ஆண்டு செல்வகணபதி சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் வசித்து வந்ததாகவும் அங்கு வாக்குரிமை இருந்ததாகவும் தெரிவித்தனர்.

Update: 2024-03-28 10:34 GMT

திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்பு மனு ஏற்பு

திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடைசியாக அவரது மனுவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியுடன் இணைந்து நாம் தமிழர் கட்சியும் சேர்ந்து போட்டியிடுவதால் தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு நாக்கள் நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் 1403 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

அதில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் வேட்பு மனுவை ஏற்க மறுத்து நிறுத்தி வைத்தது. அதாவது, செல்வகணபதிக்கு 2 தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். சேலம் மேற்கு தொகுதியிலும், சேலம் வடக்கு தொகுதியிலும் செல்வக்கணபதிக்கு வாக்குரிமை இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 17, 18 படி கிரிமினல் குற்றம் ஆகும். அதனால் அந்த வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்படும். செல்வகணபதி மீது இரட்டை வாக்குரிமை சர்ச்சை எழுந்ததால் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. செல்வகணபதி தரப்பில் தேர்தல் அலுவரிடம் ஆஜரான திமுக வழக்கறிஞர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். அதில், 2015ஆம் ஆண்டு செல்வகணபதி சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் வசித்து வந்ததாகவும் அங்கு வாக்குரிமை இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், செல்வகணபதி வடக்கு சட்டசபை தொகுதிக்கு வீடு மாற்றம் செய்தபோது, சேலம் மேற்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்ய கடிதம் அளித்ததாகவும், ஆனால், செல்வகணபதி கோரிக்கையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்திடம் நீக்கல் கடிதம் அளித்ததற்கான ஆதாரமும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால் செல்வகணபதியின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. 

Tags:    

Similar News