செங்கோலை அகற்றக் கோரும் சமாஜ்வாதி கட்சிக்கு கண்டனம்: டிடிவி
பாராளுமன்றத்தில் செங்கோலை அகற்றக் கோரும் சமாஜ்வாதி கட்சியின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில், பாராளுமன்றத்தில் நீதியின் அடையாளமாக நிறுவப்பட்டிருக்கும் பாரம்பரியமிக்க செங்கோலை அகற்றக் கோரும் சமாஜ்வாதி கட்சியின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
நேர்மையான, நியாயமான மற்றும் நடுநிலையான ஆட்சியை வழங்குவதன் அவசியத்தை உணர்த்தும் செங்கோலுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் உயரிய மரியாதை, தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செய்திருக்கிறது.
மக்களவையில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என்று கோருவதற்கு சமாஜ்வாதி கட்சிக்கு முழு உரிமை உண்டு என்றாலும், இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான செங்கோலை அகற்றியே ஆக வேண்டும் என்ற அக்கட்சியின் கருத்து பண்டையகால தமிழ் மரபிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது.
அதேவேளையில், சமாஜ்வாதி கட்சியின் கருத்தை வரவேற்றிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தமிழர்கள் மற்றும் தமிழ் மரபுக்கு எதிரான சுயரூபமும் வெளிவந்திருக்கிறது. நீதியின் சின்னமாகவும், தமிழர்களின் பெருமையாகவும் திகழும் செங்கோலை அகற்றக்கோரும் சமாஜ்வாதியின் கருத்திற்கு எதிர்ப்போ,
கண்டனமோ தெரிவிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? என்று பதிவிட்டுள்ளார்.