மாமியாருக்காக முதலமைச்சராக ஆசைப்பட்ட சரத்குமார்... முட்டாள்களா தமிழக மக்கள் ..?

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் நான் தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Update: 2023-12-11 09:04 GMT

Sarathkumar

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு ஆளாளுக்கு போட்டி போடும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது. 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டு அடுத்த முதலமைச்சராக திட்டமிட்டார். அதற்குள் முதலமைச்சர் நாற்காலி ஓ. பன்னீர்செல்வத்தை தேடி சென்றது. அதேநேரம் அதிமுக இரண்டாக பிளவுப்பட எதிர்பாராத முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார்.

நான்காண்டுகள் முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த பின்னர் 2021 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கிடையே டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து அவரும் முதமைச்சர் பதவிக்கு அடிப்போட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு புதுக்கட்சிகள் தொடங்கினாலும், ஏற்கெனவே இருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நான் முதலமைச்சராக வந்தால் எப்படி இருக்கும் என்று வாய்சவடால் விட்டு வருகிறார்.

தமிழகத்தின் அரசியலில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ள இந்த சூழலில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக பேச்சு அடிப்பட்டு ஒரு கட்டத்தில் அவர் தான் அரசியலுக்கு வரமாட்டேன் என தன்னிலை விளக்கம் கொடுத்தார். தற்போது ரஜினியை தொடர்ந்து விஜய் அரசியலில் சைலண்ட் மோடில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் மூலம் உள்ளாட்சி தேர்தல்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிப்பெற்ற விஜய், அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அறிவிக்கப்படவில்லை என்றாலும் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் செய்வது வழக்கமாகி வருகிறது.

இப்படி தமிழக முதலமைச்சர் பதவிக்கு ஆளாளாக்கு போட்டிபோட்டு வரும் நிலையில் நேற்று சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் முதலமைச்சராக வேண்டும் என ஆசை தெரிவித்திருப்பது கேலி கூத்தாகியுள்ளது. மாமியார் கேட்டார்கள், மனைவி ஆசைப்படுகிறார் என்பதற்காக முதலமைச்சராக வேண்டும் என சரத்குமார் கூறுவது அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. இது குறித்து நெல்லையில் தனது கட்சி தொண்டர்களிடம் பேசிய சரத்குமார், , “2026ஆம் ஆண்டு நான் தான் முதலமைச்சர் என எனது மனைவி சொல்கிறார். எனது மாமியாரைப் பார்க்கப் போன போது, நீ எப்ப முதலமைச்சர் ஆவ என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார். முதல்வர் ஆசை எனக்கு வந்துவிட்டதாக ஊடகங்களில் எழுதுவார்கள். யார் யாருக்கோ முதல்வர் ஆசை வரும்போது எனக்கு வரக்கூடாதா? நான் காமெடியாக பேசுகிறேன் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். மிகவும் சீரியஸானவன் நான்” என்றும் கூறினார்.

மாமியாருகாகவும், மனைவிக்காகவும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டது என ஒரு நடிகர் கூறுவது தமிழக அரசியல் தரம் தாழ்ந்து இருப்பதையே காட்டுகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அரசியல் தான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சினிமாவில் நடித்தால் அரசியலுக்கு ஈசியாக வந்து விடலாம், முதலமைச்சராகி விடலாம் என கனவு காண்கின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் சினிமாவில் நடித்து பிரபலமானதால் முதலமைச்சரானதாக தவறான முன்னுதாரணத்தை எடுத்து கொண்ட சில நடிகர்கள் தாங்களும் முதலமைச்சராகலாம் என பகல் கனவு காண்கின்றனர்.

ஆனால், நடிப்பை வைத்து ஒருவரை தலைவனாக மக்கள் ஏற்று கொள்வார்கள் என்பது எம்ஜிஆர் காலத்தோடு சென்று விட்டது என்பதை வருங்கால நடிகர்கள் தெரிந்து கொள்வந்து அவசியமாகிறது. கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒருவர் தலைவனாக வேண்டும் என்றால் மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம் என்பதை உணர வேண்டும்.

Tags:    

Similar News