ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் - காரணம் என்ன தெரியுமா..?
கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்பி கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மரியாதையும், கன்னியமுமிக்க ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ய காரணம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
நடப்பு மக்களவையின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடியும் நிலையில் லோக் சபா தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல் முதற்கட்ட தேர்தல் தொடங்குகிறது. தேர்தலுக்கு தயாராகி வரும் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்து வருகின்றன. பாஜக இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி முதல் வடமாநில முதலமைச்சர்கள் வரை முக்கிய தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிடுகிறது. இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
இதனால், தமிழகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்பி கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். அதில், கனிமொழி 5 லட்சத்து 63 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்சை சௌந்தரராஜன் 2லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இதனால் அதுவரை தமிழ்நாட்டின் மாநில பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், பிப்ரவரி 18ம் தேதி 2021ம் ஆண்டு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் பொறுப்பில் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தேர்தல் காரணமாக ஆ2அந்த பொறுப்பை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.