தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: ஆளுநரிடம் விஜய் வலியுறுத்தல்!!
தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஒரு புறம் போராட்டமும், சம்பவம் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், இன்று காலையிலே பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக பெண்களுக்கு தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து விஜய், கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து நண்பகல் 12.45 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு விஜய் வந்தார். இதன்பின், கவர்னர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்து பேசினார். அப்போது, அண்ணா பல்கலை கழக சம்பவம் மட்டும் அல்லாமல் பிற விவகாரங்கள் குறித்து மனுவாக கவர்னரிடம் விஜய் அளித்துள்ளார். சுமார் 10 நிமிடங்களே இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது. விஜய் அளித்த மனுவில், தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்துள்ளார். இதனிடையே, எங்கள் கோரிக்கைகளை கேட்ட கவர்னர் அவற்றை பரிசீலிப்பதாக கூறியதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.