ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கை - திருமாவளவன் 

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கை என திருமாவளவன்  கூறியுள்ளார்.

Update: 2024-02-02 16:01 GMT
திருமாவளவன்

தஞ்சாவூரில், வியாழக்கிழமை மாலை, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், எந்தத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் இல்லை. ஒரு வெற்று அறிக்கை இந்த நிதிநிலை அறிக்கை.

இதற்கு பிறகு நேரடியாக பா.ஜ.க, தேர்தலைச்  சந்திக்கும் என்ற நிலையில், புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அனைவரையும் ஏமாற்றக்கூடிய வகையில், பா.ஜ.க,வினரே  அதிர்ச்சியடையக் கூடிய வகையில் ஒன்றும் இல்லாத நிதிநிலை அறிக்கை உரை அமைந்துள்ளது. பா.ஜ.க தடுமாறிப் போயுள்ளது. 

தேர்தலைச் சந்திப்பதில்  மிகப் பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளைச்  சேர்ந்தவர்களை  ஒவ்வொன்றாக அழைத்து தி.மு.க., தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் விடுதலை சிறுத்தையும் பங்குபெறும். 10க்கும் மேற்பட்ட கட்சிகளை  கொண்ட கட்டுக்கோப்பான  தி.முக.,கூட்டணி,

  இண்டியா கூட்டணி. கடந்த நாடாளுமன்றத்  தேர்தல், சட்டசபை தேர்தல்,  உள்ளாட்சித் தேர்தல், வரும் நாடாளுமன்றத்  தேர்தலிலும் இந்த கூட்டணி  கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க, அ.தி.மு.க., இடையேயான கூட்டணி கொள்கையற்ற  கூட்டணி என்பதால் தான் சிதறிப் போனது. அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் யார், யார் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது.  வழக்கம் போல் பா.ம.க., தனித்து எந்த அணியில் சேரப் போகிறோம் என்பதை சூசகமாக  கூறியுள்ளனர்.

 தமிழக மக்களின் வெகுவான ஆதரவைப் பெற்ற, தி.மு.க., கூட்டணி 40க்கு 40 தொகுதியிலும்  வெற்றி பெறும்" என்றார்.

Tags:    

Similar News