Vijakanth: காற்றில் கலந்த கேப்டன் - சினிமாவுக்கு பின்னால் இருக்கும் விஜயகாந்தின் உருக்கமான கதை!
ஏழை பங்காளன், கேப்டன், புரட்சிக் கலைஞர், அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களை கொண்டவர், வானத்தை போல குணம் படைத்தவர், சொக்கத்தக்கம், கருப்பு நிலா, தைரியமானவர், தவறை தட்டிக்கேட்கும் குணம் என மக்கள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகிற்கும், அரசியலுக்கும் எப்படி ஒரு எம்ஜிஆர் இருந்தாரோ அதேபோல் தற்போது ஒரு தலைவனாக இருந்த விஜயகாந்த் மறைவு தமிழக மக்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் ஒருத்தன் இறந்தால் மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன். ஆனால் ”ஒரு நாடே அழுதால், அவன் நல்ல தலைவன். உனது மரணத்திற்கு இந்த நாடே அழுகிறதே” என வாசகம் விஜயகாந்தை பார்த்து கேட்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அப்படி தமிழகமே அழும் தலைவனாக விஜயகாந்த் இருந்துள்ளார்.
அவரது மரணம் சாதாரண மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா ஜாம்பவன்கள் என அனைவரையும் ஆட்டிப்படைத்துள்ளது. எதிரியும் நேசித்த ஒரு மனிதராக தான் விஜயகாந்த் இருந்துள்ளார். நடிகராக இருந்ததால் விஜயகாந்திற்கு இத்தனை பேரும், புழகும் வந்துவிட்டவில்லை. அதேபோல் அரசியல் தலைவனாக இருந்ததால் விஜயகாந்தை இத்தனை பேர் தேடி வந்துவிடவில்லை. லட்சக்கணக்கான கண்களும் கண்ணீர் வடிக்க காரணமாக இருந்தது விஜயகாந்தின் ஈகை குணம் தான்.
பசித்தோரின் வயிறை நிரப்பும் அட்சயப்பாத்திரமாக விஜயகாந்த் திகழ்ந்துள்ளார். அவர் திரையில் நடிக்கும் போதும் சரி, அரசியல் தலைவராக இருந்து அவரை சந்திக்க வரும் கட்சி தொண்டர்களாக இருந்தாலும் சரி தன்னை தேடி வந்தவர்களுக்கு விஜயகாந்த் முதலில் கேட்கும் வார்த்தை சாப்பிட்டீர்களா என்பது தான். பசியின் வலி அறிந்த விஜயகாந்த் தான் இருக்கும் வரை தனது கண்முன் யாரையும் பசியோடு இருக்க விட்டதில்லை. இந்த ஒரு ஈகை குணம் தான் அவரது இழப்புக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் சிந்தினர்.
விஜயகாந்த் சினிமா தாண்டி புரட்சி மனிதராகவும் வாழ்ந்து மறைந்துள்ளார். சிறு வயது முதல் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்ததால், பார்த்த சினிமாக்களை நண்பர்களிடம் காட்சிவாரியாக பேசி மகிழ்வார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்சன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அதில் எங்கள் வீட்டு படத்தை மட்டும் 70 முறைக்கும் மேல் பார்த்து மகிழ்ந்துள்ளார். சிறுவயதிலேயே அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுத்து பிரச்சனையில் மாட்டி கொள்வதால் விஜயகாந்தை கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை கவனித்துக் கொள்ள அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார்.
அப்படி ரைஸ் மில்லை விஜயகாந்த் பார்த்துக் கொள்ளும்போது அவரது வீட்டில் இருந்து மதியம் சாப்பாடு வரும். விஜயகாந்த் வீட்டில் இருந்து விருந்துக்கு படைப்பது போன்று மீன், இறைச்சி என அசைவ வகைகள் இருக்கும். அதை முழுவதுமாக சாப்பிட்டு விட்டு வெறும் தட்டை வைக்காத பழக்கம் இருக்கும் விஜயகாந்த், தனக்கு தேவையான சாப்பட்டை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை ரைஸ் மில்லில் வேலை பார்க்கும் மக்களுக்கு கொடுப்பாராம். அதனால், விஜயகாந்திற்கு வரும் உணவு பாத்திரத்தை போட்டிப்போட்டுக் கொண்டு அங்கு வேலை பார்ப்பவர்கள் சுத்தம் செய்வார்களாம்.
சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க விஜயகாந்த் வாய்ப்பு தேடி அலைந்த போது பாண்டி பஜார் சாலையில் இருக்கும் ரோஹினி லாட்ஜில் 20ம் நம்பர் அறையில் விஜயகாந்த் தங்கியுள்ளார். அவருடன் பாக்கியராஜ், ஆர். சுந்தரராஜன் உள்ளிட்டோரும் தங்கியுள்ளனர். அப்போது எம்.ஏ. காஜா தான் இனிக்கும் இளமை படத்தின் மூலம் விஜயகாந்தை திரையில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் விஜயராஜ் என்ற பெயரிலேயே விஜயகாந்த் நடித்துள்ளார். அதே பெயரில் வேறொரு நடிகர் இருப்பது தெரிய வந்ததால், விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என இயக்குநர் காஜா மாற்றியுள்ளார். அதன்பின்னர், விஜயகாந்த் என்ற பெயரே அவருக்கு கடைசி வரை வந்துள்ளது.
முதல் படத்துக்கு பிறகு விஜயகாந்த் தனது நண்பர் இப்ராஹிமுடன் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது விஜயகாந்த் படவாய்ப்புகள் தேடி சென்று விட்டால், அவரது உடைகளை இப்ராஹிம் தான் துவைத்து வைத்து விடுவாராம். அதேபோல், விஜயகாந்தை பார்க்க வருவோருக்கு இப்ராஹிம் ராவுத்தர் தான் காபி வாங்கி வந்து கொடுக்கும் வேலைகளை பாரத்துள்ளார்.
விஜயகாந்த் கருப்பாக இருப்பதாலும், அவருடன் நடித்தால் வாய்ப்புகள் கிடைக்காது என சிலர் பரப்பிவிட்ட வதந்தியால் ஸ்ரீப்ரியா, சரிதா, உள்ளிட்டோர் விஜயகாந்துடன் நடிக்க முடியாது என கூறியுள்ளனர். இதை மனம் வருத்தப்பட்டு விஜயகாந்த் ஒருமுறை கூறியுள்ளார்.
இப்படி பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயகாந்த, அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அகல்விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான்.
சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு முதலில் பிரபுவிடம் கதை சொன்ன இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இது ஆக்சன் கதையாக இருக்கே என்று பிரபு தயங்கியதும், பிறகு நிறைய புதுமுகங்களை அழைத்துப் பார்த்தார்கள் யாரும் தேறவில்லை.
ஒரு நாள் உதவி இயக்குனர்களுடன் வாகினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயகாந்தின் நெருப்பு கண்கள் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்துவிட்டது. உடனே அவரை பிடிக்க சொல்லி உதவியாளரை விரட்டி இருக்கிறார். அவர்கள் விஜயகாந்தை அழைத்து வந்தார்கள்.
நாங்கள் ஒரு படம் எடுக்க இருக்கிறோம். நீங்கள் நடிக்கிறீங்களா என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்க, நான் நடிக்கத்தான் டிரய்ப்பன்னிக்கிட்டு இருக்கேன். இப்போது ஒரு படத்தில் நடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்லி தனது பெயர் விஜயராஜ் என்று கூறி இருக்கிறார்.
அப்போது விஜயகாந்துக்கு விஜயராஜ் என்று பெயர். அதன் பிறகு தொடங்கியதுதான் சட்டம் ஒரு இருட்டறை படம். தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க இயக்கினர், எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவப்பு மல்லி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.
வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம்’, ‘ஊமை விழிகள்’, ‘கூலிக்காரன்’ , ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘பூந்தோட்ட காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ ‘புலன் விசாரணை’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.
153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.