விளவங்கோடு இடைத்தேர்தல்: இந்து, கிறிஸ்தவ பெண் வேட்பாளர்களிடையே கடும் போட்டி..!

விளவங்கோடு தொகுதியில் கிறித்துவர்களுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என ஏற்கனவே பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்து இருந்தார். இதனால் விளவங்கோடு தொகுதியில் இந்து வேட்பாளர் நிறுத்தப்படுவாரா, கிறிஸ்துவ பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என எதிர்பார்ப்பு

Update: 2024-03-20 13:55 GMT
விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்து வேட்பாளார் போட்டியிடுவாரா அல்லது பெண் வேட்பாளர் போட்டியிடுவாரா என்ற போட்டி எழுந்துள்ளது.

நடைபெறும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதி எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைந்ததால் அவருக்கு அந்த தொகுதியில் எம்பியாக போட்டியிட விஜயதாரணி விருப்பம் தெரிவித்தார். ஆனால், அனுதாப வாக்கு பெற வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தை இடைத்தேர்தலில் நிறுத்தி காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. அடுத்ததாக தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விஜயதாரணி விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைமை கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் விஜய் வசந்துக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது. இதனால், அதிருப்தியான விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனால், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விளவங்கோடு தொகுதிக்கு லோக் சபா தேர்தலுடன் சேர்த்து வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில், காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளவங்கோடு தொகுதியில் ஏற்கெனவே மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக விஜயதரணி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அதனால், தற்போது நடக்கும் இடைத்தேர்தலிலும் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பை, சமீபத்தில் அத்தொகுதியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.

இதையடுத்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி வதனா நிஷா (மீனவர்), கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவி சர்மிளா ஏஞ்சல்(கிறித்துவ நாடார்), இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ்(கிறித்துவ நாடார்), மேற்கு மாவட்ட தலைவர் பினு லால் சிங் (இந்து நாடார்) வடக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம் (இந்து நாடார்) மற்றும் தமாகாவில் இருந்து காங்கிரஸ் வந்த பொதுச்செயலாளர் கே.ஜி.ரமேஷ்குமார் (இந்து நாடார்) ஆகியோர் சீட்டு கேட்டு, மேலிட தலைவர்களிடம் காய் நகர்த்தி வருகின்றனர். இதில் கே.ஜி.ரமேஷ்குமார் மட்டுமே குளச்சல் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள், மற்ற நான்கு பேரும் விளவங்கோடு தொகுதியை சேர்ந்தவர்கள்.

மேலும் இந்த தொகுதியில் கிறித்துவர்களுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என ஏற்கனவே பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்து இருந்தார். இதனால் விளவங்கோடு தொகுதியில் இந்து வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது கிறிஸ்துவ பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. 

Tags:    

Similar News