பாஜகவின் சாதிய மனநிலை.. மதவெறி பிடித்த கட்சியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?: மம்தா
அமித் ஷா பேச்சுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று நாள் முழுவதும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது. இந்நிலையில் அமித் ஷா பேச்சுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், முகமூடி கழன்று விழுந்தது! அரசியலமைப்பின் 75 புகழ்பெற்ற ஆண்டுகளை நாடாளுமன்றம் பிரதிபலிக்கும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு எதிராக அவமதிப்பு கருத்துக்களைக் கூறி களங்கப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அதுவும் ஜனநாயகத்தின் கோவிலில்[பாராளுமன்றத்தில்] இது பாஜகவின் சாதிய மற்றும் தலித் எதிர்ப்பு மனநிலையின் வெளிப்பாடாகும். [பாஜகவின் பலம்] 240 இடங்களாகக் குறைக்கப்பட்ட பிறகும் அவர்கள் இப்படி நடந்து கொண்டால், 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற அவர்களின் கனவு நனவாகியிருந்தால் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் சேதத்தை கற்பனை செய்து பாருங்கள். டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்புகளை முற்றிலுமாக அழிக்க அவர்கள் வரலாற்றை மாற்றி எழுதியிருப்பார்கள். அமித் ஷாவின் கருத்துக்கள் பாபாசாகேப்பை ஆதர்சமாகக் கருதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகும். ஆனால் வெறுப்பை கொண்ட மதவெறி பிடித்த ஒரு கட்சியிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்பின் தந்தை, அமித்ஷாவின் கருத்து அவர் மீது மட்டுமல்ல, அனைத்து சாதிகள், இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதிகளாக இருந்து இந்தியாவின் பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமையைக் குறிக்கும் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களின் மீதும் நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும் என்று தெரிவித்துள்ளார்.