தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதாவின் வியூகம்
விஜயகாந்த் மறைவால் பலர் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனர். ஆனால், நான் ஒரு அன்பான நண்பரை இழந்து விட்டேன், அந்த அளவுக்கு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விஜயகாந்த் விட்டு சென்று விட்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
விஜயகாந்த் மறைவால் பலர் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனர். ஆனால், நான் ஒரு அன்பான நண்பரை இழந்து விட்டேன், அந்த அளவுக்கு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விஜயகாந்த் விட்டு சென்று விட்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த 28ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் கடந்த 29ம் தேதி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர். விஜயகாந்த் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் தேமுதிக கட்சியின் நிலை என்ன, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா யாருடன் கூட்டணி அமைப்ப்பார், தேமுதிக கட்சிக்கு உள்ள சவால்கள் என்ன, தலைவன் இல்லாத நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நிலைபாடு என்ன, கட்சியை சமாளிக்கும் திறமை பிரேமலதாவிடம் உள்ளதா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
சினிமாவில் நடிப்பதில் இருந்தே கலைஞர் கருணாநிதி மீது அதிக பற்றுக் கொண்ட விஜயகாந்த், திமுக ஆதரவாளராக இருந்தார். ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக 2005ம் ஆண்டு விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்தார். அதுவரை 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகள் மட்டும் ஆட்சி செய்து வந்த நிலையில் மூன்றாவது கட்சியாக காலூன்ற ஆம்பிரத்தது தேமுதிக. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரு ஆளுமைகளை எதிர்த்து நின்றார் விஜயகாந்த்.
தேமுதிக கட்சியை தொடங்கிய ஒரே ஆண்டில் விஜயகாந்த் தேர்தலை சந்தித்தார். 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் 8.4 சதவீத வாக்குகளை பெற்ற தேமுதிக கட்சி அதிமுக, திமுகவுக்கு பிறகு பெயர் கூறும் அளவுக்கு மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. பாமகவின் பலம் வாய்ந்த விழுப்புரம் கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிட்டு விஜயகாந்தின் தேமுதிக கட்சி வெற்றிப்பெற்றது. இந்த வெற்றி தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுவரை வடதமிழகத்தில் அறிமுகமாக ஒரு கட்சி வெற்றிப்பெறுவது சாத்தியமில்லாததாக இருந்தது.
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே விருத்தாசலம் தொகுதியில் வெற்றிப்பெற்ற விஜயகாந்த் முதல் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். தொடர்ந்து 2009ம் தேதி மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக கட்சி 10.54 சதவீத வாக்குகளை பெற்ற மீண்டும் அனைவரது கவனத்தையும் பெற்றது. தொடர்ந்து 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக கட்சி 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று திமுகவை வீழ்த்தி பிரதான எதிர்கட்சியாக மாறியது. ஆனால் வாக்கு சதவீதம் 7.9 ஆக இருந்தது.
இப்படி அசுர வேகத்தில் வளர்ந்து வந்த தேமுதிக கட்சி, விஜயகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக சரிய தொடங்கியது. விஜயகாந்த் உடல்நிலை மோசமடைந்து வருவதை போல், கட்சியின் நிலையும் மோசமாகி கொண்டே சென்றது. 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. வாக்குசதவீதம் 2.16 ஆக குறைவானது.
2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, 60 தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்ததுடன், வாக்கு வங்கி 0.45 சதவீதமாக குறைந்தது. இப்படி விஜயகாந்த் அரசியல் வாழ்க்கை சரிய தொடங்கியது. இந்த நிலையில் அவரது மறைவு தேமுதிக கட்சியை மீண்டும் நினைவு கூட்டியுள்ளது.
தற்போது மக்களவை தேர்தல் வர உள்ளதால் தேமுதிக கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் தேமுதிக, பாஜகவுடன் கூட்டாணி அமைக்கும் என்ற பேச்சு அடிப்படுகிறது. அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் ஆல் இரு பிரிவாக உள்ளது. ஓபிஎஸ் அணி சசிகலா மற்றும் பாஜகவுடன் இணைந்துள்ளன. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக கட்சி உள்ளது. இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. அதேநேரம் பாமக திமுகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு குறையும் என்றும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் இணைய தயாராகியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், விஜயகாந்த் மறைவு தேமுதிக கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் இல்லாத கட்சியை பிரேமலதா விஜயகாந்த் வழி நடத்துவாரா என்ற அதிருப்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இருந்தாலும் திமுகவுக்கு கலைஞர், அதிமுகவுக்கு அம்மா என்ற ஒற்றை வார்த்தை மந்திரத்தை போல் கேப்டன் என்ற ஒற்றை வார்த்தை மந்திரத்தை வைத்துக் கொண்டு கட்சியை வழிநடத்தி ஆட்சியை பிடிக்கலாம் என்ற மனக்கணக்கை போட்டு காய் நகர்த்தி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த்.