கவர்னர் மாளிகை முன்பு குண்டு வீசிய ரவுடியின் பின்னணியில் யார்? யார்? - பரபரப்பு தகவல்கள்
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருவது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை காண்போம்.
சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 25ம் தேதி மதியம் 3 மணியளவில் நடந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகையின் முதலாவது நுழைவாயில் முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீது விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது. இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் துறையினர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்தனர்.
இதையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், அவன் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. இவன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு மாம்பலத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையிலும், 2017-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளான் என்பது தெரியவந்தது. மேலும், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டிருந்தான். குற்ற வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவன் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளான். தற்போது ஆளுனர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் சிறையில் அடைக்கப்பட்டு ளான்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணியரிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஆளுநரின் துணை செயலாளர் கொடுத்துள்ளார்.
அதில், கடந்த சில மாதங்களாக ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. பெரும்பாலும் இதில் ஈடுபட்டது திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் தான். வாய்மொழி தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2022-ல் தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால், எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. இப்படியாக ஆளுநர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்ட புகார் மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆளுநரை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தொடர்பான புகார்கள் மீது காவல் துறை அலட்சியம் காட்டியது. அது ஆளுநர் மற்றும் ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பை குலைத்தது. அதன் விளைவுதான் தற்போது ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்டுள்ள பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல். வாய்மொழி தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் கடந்து தற்போது பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகையில் வீசப்பட்டுள்ளது என்று சரமாரியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும்,பாதுகாப்பற்ற நிலையில் ஆளுநர் பணியாற்ற முடியாது. அதனால் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையான விசாரணையை மேற்கொண்டு, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆளுனர் மாளிகையின் புகார்களை தமிழக காவல்துறை மறுத்துள்ளது.இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 25-10-2023 அன்று நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும் அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டனர் எனவும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிறும் புறம்பானது.
அதேபோல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலைவில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.
மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். மேதகு ஆளுநருக்கும், அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முந்தைய வழக்கில் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார் என்று வலைதளங்களில் அவரது செல்போன் எண்ணுடன் தகவல் பரவியது. திமுக ஐடிவிங் சார்பில் இது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.
ஆனால், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர் என்று பாஜக தரப்பில் புகார் கூறப்பட்டது. கருக்கா வினோத் என்ற நபரை இதற்கு முன்பு மற்றொரு வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது என்று தமிழக பாஜக கூறியுள்ளது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார். அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது என்றும் பாஜக விளக்கமளித்துள்ளது.
தன் மீதே பல ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு, ஊழல் தடுப்புப் பிரிவைக் கையாளும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூன்றாம்தர இணைய ஊடகங்களைப் போல பொய்ச் செய்திகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார். நீதிமன்ற வளாகத்திலேயே கொலைகள் நடப்பது முதல், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கையில், சட்டத் துறை அமைச்சர் சிறிதேனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார் செய்த நிறுவனம் ஒன்று அளித்த நேர்காணலில், பாஜகவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கோட்டூர் ராகவன் என்பவர் என்னை சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் பின் அவரை தொடர்பு கொண்டு பாஜகவில் இணையவில்லை என தெளிவுபடுத்திவிட்டேன் என்று விளக்கமளித்துள்ளார். வழக்கறிஞராக அனைத்து கட்சிகளுக்கும் வழக்கு நடத்தியுள்ளேன்.
கருக்கா வினோத் என்னுடைய ஜூனியரின் க்ளைண்ட். ஜூனியர் வழக்கை தாக்கல் செய்துவிட்டார். அவர் என்னை அணுகினார். நாங்கள் அவருக்கு ஜாமீன் எடுத்துக் கொடுத்தோம். காவல் துறையினர் இது குறித்து விசாரித்தார்கள். அவர்கள் கேட்ட ஆவணங்களை எல்லாம் கொடுத்துவிட்டேன்
என வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதனிடையே பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மற்றும் அவனது தொடர்புகள் பற்றி என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகாமை விசாரணை நடத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.