விருதுநகர் எம்.பி தொகுதியில் யார் போட்டி? யாருக்கு வெற்றி?

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் எந்தெந்தக் கட்சி போட்டியிடப்போகிறது என்ற தகவலும், யாருக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய களநிலவர ஆய்வுகளும் வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான செய்தித்தொகுப்பை பார்ப்போம்.

Update: 2023-11-30 08:51 GMT

lok sabha election 2024

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண் என்று போற்றப்படும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய  6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளும் விருதுநகர் மக்களவை தொகுதிக்குள் உள்ளது.

விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் அதிகமாக உள்ளனர். பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி, பருப்பு, எண்ணெய் மொத்த விற்பனை உள்ளிட்ட தொழில் பிரதானமாக இருந்தாலும், வேலைவாய்ப்பின்மை பிரச்சனை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பருத்தி விவசாயம் மற்றும் சிறு, குறு நிறுவனங்களில் தொழிலாளர்களாக இருந்தவர்கள் பலர் வேலையை இழந்துள்ளனர். இந்த தொகுதியில் சாதிய வாக்குகளும் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்குலத்தோர், நாயுடு, தேவேந்திர குல வேளாளர், நாடார், முத்தரையர் ஆகிய சமூகங்கள் பெரும்பான்மையாக உள்ளன. பிள்ளை, கம்மாளர், செட்டியார் கிறிஸ்தவர், இஸ்லாமியர் உள்ளிட்ட சமூகங்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளன.

இந்த தொகுதி சிவகாசி என்ற பெயரில் இருக்கும் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார், மேலும் 2004 ஆம் ஆண்டில் மதிமுகவின் வேட்பாளர் சிப்பிப் பாறை ஏ.ரவிச்சந்திரன் வெற்றி பெற்றார்.2008 ஆம் ஆண்டு எல்லை மறுநிர்ணயம் செய்யப்பட்ட பின், சிவகாசி தொகுதி விருதுநகர் தொகுதியாக மாற்றப்பட்டது. 2009 மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு விருதுநகர் தொகுதியை திமுக ஒதுக்கியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம், வைதோ தோல்வி அடைந்தார்.  2014 தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனிடம் வைகோவும், மாணிக் தாகூரும் தோற்றனர், அப்போது திமுக, காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பாக பொன். அழகர்சாமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம்தாகூர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பரமசிவ ஐயப்பன், மக்கள் நீதி மய்யத்தின் முனியசாமி, நாம் தமிழர் கட்சியின் அருள்மொழி தேவன் உள்ளிட்ட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.

வருகிற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளருமான ராஜ்சத்யன் நிறுத்தப்படுவார் என்று பேசப்படுகிறது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் விருதுநகர் தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என்றும் பேசப்படுகிறது. ஆனால், காமராஜர் பிறந்த விருதுநகர் தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உள்ளூர் காங்கிரசார் உறுதியாக உள்ளனர். வருகிற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்க தக்கவைக்கக் கோரி  விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் செயற்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட மாணிக்கம் தாகூர் ஆயத்தமாகிறார்.

பாஜக சார்பில் வேட்பாளராக பேராசிரியர் ராம.சீனிவாசன் களமிறங்கலாம் என்றும் பேசப்படுகிறது.

இத்தொகுதியில் தெலுங்கு பேசும் நாயுடு, ரெட்டியார் வாக்குகளை நம்பி மதிமுக போட்டியிட விரும்புவதாகவும், முக்குலத்தோர் மற்றும் நாடார் வாக்குகளை நம்பி காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாகவும், 25 சதவீதம் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை நம்பி அதிமுக போட்டியிட விரும்புவதாகவும் பேசப்படுகிறது. இதே போல்,

நாயுடு, ரெட்டியார், இந்து நாடார்,தேவேந்திர குல வேளாளர், முத்தரையர் வாக்குகளை நம்பி பாஜகவும் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை விருதுநகர் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டால், இந்த தொகுதியை கேட்டு வரும் காங்கிரசுக்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வாய்ப்புள்ளது.

கடந்த 2009, 2014 மற்றும் 2019 ஆகிய மூன்று தேர்தல் முடிவுகள்  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வெற்றியை அளித்துள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று பொதுவாக பேசப்பட்டாலும்,

தற்போதைய களநிலவரம் யாருக்கும் சாதகமில்லாத நிலையில் உள்ளது.

Full View

Tags:    

Similar News