ஈரோடு எம்.பி தொகுதியில் யார் போட்டி? யாருக்கு வெற்றி?

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிடப்போகிறது என்ற தகவலும், யாருக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான செய்தித்தொகுப்பை பார்ப்போம்.

Update: 2023-11-26 04:01 GMT

Erode Parliamentary Election

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரியார் மண்ணாகவும் மஞ்சள் மாநகரமாகவும் அழைக்கப்படும் ஈரோடு, பல மாற்றங்களை ஏற்படுத்திய ஊராகும். இங்கு இதுவரை நடந்துள்ள 16 பொதுத் தேர்தல்களில் முதல் தேர்தல், மூன்றாவது தேர்தல், 15வது மற்றும் 16வது தேர்தல்களில் ஈரோடு மக்களவைத் தொகுதியாக இருந்துள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதி

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் காங்கேயம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். ஈரோடு மக்களவைத் தொகுதியில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

முக்கிய தொழிலாக வேளாண்மை உள்ளது, அதற்கு  அடுத்தபடியாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களும் தொழிலாளர்களுமே ஈரோடு தொகுதியில் அதிகமான வாக்காளர்களாக உள்ளனர். ஈரோடு மக்களவை தொகுதியில் சாதிகள் வாரியான புள்ளிவிவரங்களும் வெளியாகியுள்ளன. இங்கு

கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் பிரதானமாக 35 விழுக்காடு அளவு உள்ளது. அவர்களுக்கு அடுத்ததாக செங்குந்தர் முதலியார் சமூகம் 12 விழுக்காடும், அருந்ததியர் சமூகத்தினர் 10 விழுக்காடும், நாயுடு சமூகத்தினர் 7 விழுக்காடும், இஸ்லாமியர் 5 விழுக்காடும், பறையர் சமூகத்தினர் 5 விழுக்காடும், நாடார் சமுகத்தினர் 5 விழுக்காடும், வன்னியர் 5 விழுக்காடும், முத்தரையர் சமூகத்தினர் 4 விழுக்காடும் உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் 2 சதவிதமும், கிறிஸ்தவர்கள் 2 சதவீதமும், எஞ்சியவை ஆசாரி, பிள்ளை உள்ளிட்ட சமூகங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி , அதிமுக வேட்பாளர் மணிமாறனைவிட 2 லட்சத்து 10 ஆயிரத்து 618 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றவர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ள இவர் ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர். இளங்கலை பொருளியல் படிப்பும், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும்  முடித்தவர். 1984ஆம் ஆண்டு திமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர்.

திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருடன், கணேசமூர்த்தியும் திமுகவில் இருந்து வெளியேறினார். வைகோ மதிமுக தொடங்கியபோது, அக்கட்சியின் முக்கியமான தலைவர்களில் கணேசமூர்த்தியும் ஒருவரானார்.

எந்த நேரமும் யாரும் சந்திக்கக் கூடிய எளிமையும் தொகுதி நிதியை முழுதாகப் பயன்படுத்தினார் என்ற பெயரும் நாடாளுமன்றத்தில் திறன்பட செயல்பட்டார் என்ற நன்மதிப்பும் கணேசமூர்த்திக்கு தொகுதிக்குள் உள்ளது.

2024 மக்களவை தேர்தலில், மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடாது என்றும் விருதுநகர், திருச்சி,  காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளை திமுகவிடம் மதிமுக கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மதிமுகவுக்கான தொகுதி எது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ஈரோடு தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுகவிடம் கேட்டு வருகிறது. கடந்த முறை நாமக்கல்லில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இம்முறை தொகுதியை மாற்றப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் ஈரோடு தொகுதியை காங்கிரசும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 மாதங்களே உள்ள நிலையில், திமுகவினர் சிலரும் ஈரோடு தொகுதியில் போட்டியிட காத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது ஈரோடு வந்திருந்த முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அங்குள்ள செங்குந்தர் முதலியார் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி ஆதரவு திரட்டினார். அப்போது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட செங்குந்தர் முதலியார் சமூகத்தை சேர்ந்த சந்திரகுமாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சபரீசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற சபரீசன் உறுதி அளித்தார் என்று தகவல் வெளியானது. இதன் காரணமாக இங்கு திமுக போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு தொகுதியை பொறுத்தவரை தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவான நிலையே உள்ளது.

Tags:    

Similar News