நீலகிரி தொகுதிக்கு அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் - ராசா
நீலகிரி தொகுதிக்கு அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என எம்பி ராசா பேசினார்.
நடந்து முடிந்த நீலகிரி மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ ராசா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல் முருகனை காட்டிலும் 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆ ராசா வருகை தந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திறந்த நிலை வாகனத்தில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தாளவாடி பேருந்து நிலையம் முன்பாக பொதுமக்களிடையே நன்றி தெரிவித்து எம் பி ஆ ராசா பேசுகையில், 400 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றுவோம், திமுக என்ற கட்சி இருக்கவே இருக்காது என்று மோடி திமிர் பேச்சு பேசினார். முதல்வர் மு க ஸ்டாலின் தான் அரசியல் சட்டத்தை காப்பாற்றியிருக்கிறார். 40 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக என்ன கிழிக்கப் போகிறது என பேசுகிறார்கள். நாங்கள் ஏற்கனவே நிறைய கிழித்து இருக்கிறோம். தாளவாடி பகுதிக்கு மற்றவர்கள் செய்ய முடியாததை நாங்கள் செய்திருக்கிறோம். இன்னும் செய்வோம் ஏனென்றால் ஆட்சி எங்கள் கையில் இருக்கிறது மத்திய அரசில் இருந்திருந்தால் பத்தாயிரம் கோடி கூடுதலாக கிடைத்திருக்கும் இப்போது இல்லை அவ்வளவுதான்.
பிரதமர் மோடியால் அரசியல் சட்டத்தை திருத்த முடியாது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் சந்திரபாபு நாயுடு வையும் பீகாரையும் மோடி நம்பியிருக்கிறார் பிரதமர் மோடியால் தனியாக ஆட்டம் போட முடியாது கடந்த ஆட்சியில் நாடாளுமன்றத்திற்கு மோடி வந்த போது அவரது கட்சியினர் மோடி மோடி என்றார்கள் தற்போது 237 இடங்களை பெற்று இருக்கிற நாங்கள் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால் போடி போடி என்று கூறுவோம்
ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்று கூறிய மதம் பிடித்த மோடியை அங்குசமாக இருந்து இந்தியாவை காப்பாற்றியது திமுக. ஆட்சிக்கு வர முடியவில்லை மத்திய அமைச்சர் ஆக முடியவில்லை என நீங்கள் கவலை பட வேண்டாம்.மத்திய அரசின் அனைத்து நிதியும் கிடைக்கும்.ஆடி கரக்கிற மாட்டையும் பாடி கரக்கிர மாட்டையும் எப்படி கறக்க வேண்டும் என முக ஸ்டாலினுக்கு தெரியும். உங்களது எம்பி அமைச்சராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீலகிரி தொகுதிக்கு அனைத்து திட்டங்களையும் கொண்டு வருகிற ஒரு நல்ல நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என வாக்களித்த உங்களுக்கு உறுதி இவ்வாறு அவர் பேசினார்.