பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய எம்எல்ஏ

பங்களிப்புத் தொகை செலுத்திய பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கி வாழ்த்திய எம்எல்ஏ.

கரூர் மாவட்டத்தில், குறிப்பாக நகரப் பகுதிகளில், சொந்த வீடு இல்லாத ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், புலியூர் அருகே புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்க முழு பங்களிப்பு தொகை செலுத்திய பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கி ஆணை வழங்கும் விழா காந்திகிராமம் பகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி அலுவலகத்தில் அவருடைய தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், புலியூர் பேரூராட்சி துணைத் தலைவர் அம்மையப்பன், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் பாலாஜி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். இங்கு கட்டப்பட்ட ஒவ்வொரு வீடும் ரூபாய் 8 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு பயனாளிகளின் பங்கு தொகையாக ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 140 செலுத்த வேண்டும். மீதி உள்ள தொகையில் மத்திய அரசு,ஒரு லட்சத்து ஐம்பதாயிரமும், தமிழக அரசு 7 லட்சத்து 64 ஆயிரத்து 860 செலுத்தி உள்ளது.

இந்த வீட்டில் குடியிருப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், ஏற்கனவே ரூபாய் ஒரு லட்சம் செலுத்தியுள்ளனர். மீதி செலுத்த வேண்டிய ரூபாய் 20,140-ஐ இன்று செலுத்திய 60- பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கியதற்கான ஆணையை எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். வீடு ஒதுக்கியதற்க்கான ஆணையை வழங்கிய எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர் பயனாளிகள்.

Tags

Next Story