அமராவதி ஆற்றில் வெள்ளம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையின் நீர் மட்டம் இன்று காலை சுமார் 07.00 மணியளவில் 83.24 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 10,194- கனஅடி நீர்வரத்து வந்துகொண்டிருப்பதால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், அமராவதி ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்துவிட வாய்ப்புள்ளது. மேலும், இது தொடர்பாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அமராவதி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறும், வெள்ளநீர் புகும் அபாயமுள்ள அமராவதி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறி, அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்குமாறும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.