காங்.வேட்பாளர் முதல் அறிமுக கூட்டத்தை திமுக நிர்வாகிகள் புறக்கணிப்பு.
கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜோதிமணி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த தேர்தலில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி ஆதாரவோடு தேர்தலை எதிர் கொண்டு, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு செந்தில் பாலாஜிக்கும், ஜோதிமணிக்கும் ஏற்பட்ட பூசல் காரணமாக கூட்டணி கட்சியினர் இடையே அதிர்ப்தி நிலவி வந்தது. கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கூடாது, வேட்பாளராக ஜோதி மணியை நியமிக்க கூடாது என தேர்தலுக்கு முன்பே திமுகவினர் குரல் எழுப்பினர்.
இந்த நிலையில், போராடி மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஜோதிமணியை கட்சியின் சார்பில் நேற்று இரவு அறிவித்தனர். இந்நிலையில், கரூர் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில், இன்று மதியம் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகவும்,
செய்தியாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டணிக் கட்சியினர் பெரும்பாலானோர் வந்த நிலையில் ஜோதிமணி சற்று காலதாமதமாக அறிவாலயத்துக்கு வந்தார். கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா அவரை வரவேற்றார்.
ஆயினும் திமுக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் எவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி அதனை வெளிக்காட்டி கொள்ளாமல்,தேர்தல் தொடர்பாக முதல் கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்துவிட்டு அமர்ந்தார்.
கூட்டணி கட்சியை சேர்ந்த ஓரிறு நிர்வாகிகள் ஜோதிமணிக்கு சால்வை அணிவித்தனர். திமுக கட்சி நிர்வாகிகள் எவரும் முதல் கூட்டத்திலேயே பங்கேற்காததால், கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர்.