பாஜக சார்பில் கரூர் வேட்பாளராக வி.வி. செந்தில்நாதன் அறிவிப்பு
கரூர் பாஜக வேட்பாளர்
பாரதிய ஜனதா கட்சியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளராக வி.வி. செந்தில்நாதன் அறிவிப்பு. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், கட்சிகள் கூட்டணி அமைத்து பின்னர் தொகுதிகள் பங்கீடு முடிந்து, வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின், கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் வி.வி. செந்தில் நாதனை சற்று முன் கட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வயது 42. இவர் பட்ட படிப்பு முடித்துள்ளார். கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
மேலும், கரூரில் கிரானைட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளதால், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், கட்சி மேலிட பொறுப்பாளர்கள் அலைபேசியில் வி.வி செந்தில்நாதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.