கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கரூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கரூர் அருகே உள்ள ஆண்டாங்கோவில் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் வயது 12, ஸ்ரீதர் மகன் விஷ்ணு 11, இளங்கோ மகன் மாரிமுத்து வயது 11 ஆகிய மூன்று பேரும் குளிக்க சென்ற மூன்று மாணவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

குளிப்பதற்காக உடைகளை களைத்து கிணற்று மேட்டில் வைத்துள்ளனர். மாணவர்களை காணாத பெற்றோர்கள் நேற்று இரவு வரை தேடிய போது, கிணற்றின் அருகில் கிடைத்த உடைகளை கண்டு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நள்ளிரவு 1-மணி அளவில் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிய போது மூன்று மாணவர்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அறிந்த கரூர் மாநகர காவல்துறையினர் சம்பவ இடத்தில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கரூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story