கரூரில் லஞ்சம் கேட்ட விஏஓ: 5ஆண்டு சிறை

கரூரில் லஞ்சம் கேட்ட விஏஓ: 5ஆண்டு சிறை

தண்டனை விதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்

கரூரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட வழக்கில் VAO-வுக்கு இரண்டு சட்டப்பிரிவுகளில் 5- ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 20,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, காதப்பாறை அருகே உள்ள வெண்ணமலை பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மகன் செந்தில் குமார். செந்தில்குமார் அவரது தந்தை நல்லுசாமி பெயரில் உள்ள பட்டாவை தனது பெயரிலும் தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டி கடந்த 2016 ஆம் ஆண்டு காதப்பாறை கிராம நிர்வாக அலுவலர் மாலதியை நாடி உள்ளார்.

பெயர் மாற்றம் செய்ய ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார் விஏஓ மாலதி. லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார், இது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் பேரில், மாலதியிடம் பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.

அப்போது இந்த லஞ்சப் பணத்தை வாங்குவதற்கு, அவருக்கு உதவியாக இருந்த கிராம நிர்வாக உதவியாளர் முனியப்பனையும் கைது செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்த வழக்கு கரூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி ராஜலிங்கம், கிராம நிர்வாக அலுவலரும், உதவியாளரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். குற்றவாளியான விஏஓ மாலதிக்கு இரண்டு பிரிவுகளில் 2- ஆண்டுகள் மற்றும் 3-ஆண்டுகள் சிறை தண்டனையும், 2- பிரிவுகளிலும் தலா பத்தாயிரம் வீதம் 20 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பு அளித்தார்.

இதே போல கிராம நிர்வாக உதவியாளருக்கு, 2- பிரிவுகளின் கீழ் 1- வருடம் மற்றும் 2- வருடம் என 3- வருடம் சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் வீதம் 10-ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும், திருச்சி மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் காவல்துறையினர் கொண்டு சென்றனர். லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அளித்த தண்டனையால், கரூரில் அரசு அதிகாரிகள் இடையே பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story