அடகுகடையில் நகைகள் மாயம் - தப்பியோடிய ராஜஸ்தான் ஊழியர் கைது

அடகுகடையில் நகைகள் மாயம் - தப்பியோடிய ராஜஸ்தான் ஊழியர் கைது

பைல் படம் 

பொன்னேரி அருகே அடகு கடையில் 250 பவுன் நகை திருடப்பட்ட சம்பவத்தில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு தப்பிச் சென்ற ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த கன்யாலால் (59) என்பவர், பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த அடகு கடையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் வியாஷ் (50), கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நீரிழிவு நோய் காரணமாக கன்யாலால் வீட்டில் ஓய்வு எடுத்து வந்ததால், சமீப காலமாக சுரேஷ் வியாஷ் அடகு கடையை நிர்வகித்து வந்துள்ளார்.

இச்சூழலில், சுரேஷ் வியாஷ் கடந்த மாதம், தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அடகு கடையின் சாவியை கன்யாலாலிடம் ஒப்படைத்துவிட்டு ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2019 -ம் ஆண்டு முதல், 2024 வரையிலான அடகு கடையின் கணக்குகளை கன்யாலால் ஆய்வு செய்தார். அந்த ஆய்வில், கடையில் இருந்து சுமார் 250 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து கேட்பதற்காக, சுரேஷ் வியாஷை செல்போனில் தொடர்பு கொள்ள கன்யாலால் முயற்சித்தபோது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

ஆகவே, சுரேஷ் வியாஷின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட கன்யாலாலிடம், நகைகள் குறித்து கேட்டால் சுரேஷ் வியாஷ் தற்கொலை செய்து கொள்வார் என, அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆகவே, தன் கடையில் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக கன்யாலால் அளித்த புகாரின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு பொன்னேரி போலீஸார், ராஜஸ்தான் மாநிலத்துக்கு தப்பி சென்ற, அடகு கடை ஊழியர் சுரேஷ் வியாஷை விசாரணைக்காக அழைத்து வருவதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

போலீஸார் அங்கிருந்து சுரேஷ் வியாஷை பொன்னேரி காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். தொடர்ந்து, சுரேஷ் வியாஷிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, போலீஸார், சுரேஷ் வியாஷிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story