மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜரான ரவுடியை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவு
ரவுடி சத்யா
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில், உண்மை கண்டறியும் சோதனையில், உள்ளாக்கப்பட்ட 18 நபர்களில், பிரபல ரவுடி சீர்காழி சத்யா(35)வும் ஒருவர். இவர் மயிலாடுதுறையில் 2005ஆம் ஆண்டு டெலிபோன் ரவி என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாவார். சத்யா மீது மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 வழக்குகளும், தமிழகம் முழுவதும் 5 கொலை வழக்கு, 4 கொலைமுயற்சி வழக்கு, குற்ற வழக்குகள் என 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு ஜாமீனில் வெளியேவந்த சத்யா, ராமஜெயம் வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராகவில்லை. நன்னிலம் மற்றும் காரைக்கால் நீதிமன்றங்களில் சத்தியா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த நீதிமன்றங்களில் ஆஜர் ஆகி வழக்கை ஒத்திவைத்தார். அதே போன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை ஒத்திவைக்க 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். மயிலாடுதுறை அரசு வழக்கறிஞர் ராமசேயோன் மற்றும் காவல்துறையினர் கடுமையான ஆட்சேபத்தை எழுப்பினர், சத்தியாவிற்கு ஆதரவாக வழக்கறிஞர் குழுவினர் ஆஜராகி வாதாடினார்கள். மாவட்ட நீதிபதி கந்தகுமார், மாலை வரை சத்யாவை நீதிமன்றத்தில் அமர வைத்து மாலையில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சத்யாவை மயிலாடுதுறை போலீசார் அழைத்துச் சென்று நாகப்பட்டிணம் கிளைச்சிறையில் அடைத்தனர்