ஆதி திராவிட மாணவர்கள் தங்கும் விடுதியில் நான்குபேர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பொழுது ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் தங்கும் விடுதி முறையாக பராமரிக்கப்படாமல் சமையல் கூடத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததில் நான்கு பேர் பணியிட மாற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் எம்எல்ஏக்கள் ஐய்யப்பன், சி.வி.எம்.பி எழிலரசன்,சிவக்குமார்,ஆர்.டி சேகர் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறை ஆதீதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கழிவறை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்து இருந்ததை கண்டு அதிகாரிகளை அழைத்து குழு தலைவர் செல்வ பெருந்தகை பராமரிக்காதது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பி கடிந்து கொண்டார். பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிய நிலையில் கட்டிடம் தரமான முறையில் உள்ளதா என்று தரச் சான்று வாங்கினீர்களா என்று கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலமிடம் அதிகாரிகள் பொறுப்பின்றி செயல்படுவது சரியா என்று சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சமையல் கூடத்தை பார்வையிட்ட குழுவினர் சமையல் கூடம் திறந்த வெளியில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் மரவட்டைகள் உள்ளிட்ட பூச்சி புழு உள்ள இடத்தில் வடிக்கப்பட்ட உணவுகளை வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இது போன்ற சுகாதாரமற்ற உணவுகளை தருவீர்களா என்றும் நாங்கள் ஆய்வு செய்ய வந்த போதே சமையல் கூடத்தை கூட ஒழுங்காக பராமரிக்காமல் சுகாதாரமற்ற முறையில் வைத்துள்ளது குறித்து கடுமையாக அதிருப்தி தெரிவித்த எம்எல்ஏக்கள் அரசியல் அமைப்பு தந்தை அம்பேத்கர் படத்தை கூட ஒழுங்காக வைக்கவில்லை என்று திட்டி தீர்த்தனர். தொடர்ந்து குழுதலைவர் செல்வப் பெருந்தகை விடுதி சமையலர் செல்லப்பா, விடுதிகாப்பாளர் மோகன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ் இளநிலை பொறியாளர் லெட்சுமி காந்தன் உள்ளிட்ட நால்வரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தார். இதுபோன்று சஸ்பெண்ட் செய்தால் தான் தமிழகத்தில் பணியை ஒழுங்காக செய்யாமல் அலட்சியமாக செய்யும் அதிகாரிகளுக்கு பாடமாக அமையும் எனக் கூறினார். முதல்வன் பட பானியில் மாணவர் விடுதியிலேயே அடுத்தடுத்து பணியில் ஒழுங்காக செயல்படாத நால்வரை சஸ்பெண்ட் செய்ய மதிப்பீட்டு குழுவினர் பரிந்துரைத்து எச்சரிக்கை விடுத்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நால்வரையும் பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்து பரிந்துரைக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார். முன்னதாக கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 94 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட நகராட்சியில் உள்ள ஐய்யன் குளத்தையும், மன்னம்பந்தலில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்பட்ட கான்கிரீட் வீட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Next Story