அரசு ஊழியர்களின் கோரிக்கை சட்டமன்றத் தேர்தலுக்குள் நிறைவேற்ற வேண்டும்
Mayiladuthurai King 24x7 |27 July 2024 11:26 AM GMT
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி தர வேண்டும்:- மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் பேட்டி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து ஊழியர் நலனுக்காகவும், மத்திய, மாநில அரசுகளின் தனியார்மய கொள்கைகளுக்கு எதிராகவும் தனது வாழ்நாள் முழுவதும் குரல் எழுப்பிய இரா.முத்துசுந்தரத்தின் 7-ஆம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவபழனி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சங்கத்தின் மாநில செயலாளர் கோதண்டபாணி 'பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் தமிழக அரசும்- இழந்த உரிமைகளை மீட்பதற்காக போராடும் அரசு ஊழியர்களும்" என்ற தலைப்பிலும், சங்கத்தின் மாநில பொருளாளர் 'அரசு ஊழியர் சங்க வரலாற்றில் இரா.முத்துசுந்தரம்" என்ற தலைப்பிலும் பேசினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநில பொருளாளர் பாஸ்கரன் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்திவந்த பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதேபோல், மத்திய பட்ஜெட்டிலும் பணி நியமனம், 7-வது ஊதியக்குழு அறிவிப்பு போன்ற எந்த அறிவிப்பும் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்
Next Story