எவர்சில்வர் குடத்துக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்ட நாய் மீட்பு
Mayiladuthurai King 24x7 |31 July 2024 6:31 AM GMT
மயிலாடுதுறை அருகே தண்ணீருக்காக எவர்சில்வர் குடத்துக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்ட நாயை மணல்மேடு தீயணைப்பு துறையினர் வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றி நாயை மீட்டெடுத்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வக்காராமாரி கிராமத்தில் சாலையில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று குடிநீர் அருந்துவதற்காக சில்வர் குடத்தினுள் தலையை விட்டபோது மாட்டிக்கொண்டுள்ளது. தொடர்ந்து நாள் முழுவதும் குடத்தில் இருந்து தலையை வெளியே எடுக்க முடியாமல் அப்பகுதியில் கூச்சலிட்டபடியே சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் குடத்தை நாயின் தலையில் இருந்து பிரிக்க முற்பட்டு உள்ளனர். பின்னர் குடம் நாயின் தலையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்ததால் மணல்மேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மணல்மேடு நிலைய அலுவலர் வீரமணி மற்றும் தியாகராஜன் தலைமையில் தீயணைப்பு துறை அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று நாயை மீட்டு அழைத்து வந்துள்ளனர். தீயணைப்பு நிலையத்தில் குடத்தை நாயின் தலையில் இருந்து பிரித்தெடுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் இறுதியாக இரும்பை துண்டாக்கும் மிஷினை (கட்டர் மிஷின்) பயன்படுத்தி சில்வர் குடத்தை நாயின் தலையில் இருந்து வெட்டி பிரித்து எடுத்தனர். உடனடியாக நாய் அப்பகுதியில் இருந்து துள்ளி குதித்து ஓட துவங்கியது. பின்னர் நிலைய அதிகாரிகள் நாய்க்கு பிஸ்கட் மற்றும் உணவுகளை வாங்கி கொடுத்து கிராமவாசிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
Next Story